வாணியம்பாடி அருகே ரூ.5 லட்சம் மதிப்பிலான 630 கிலோ குட்கா பொருட்கள் வேனுடன் பறிமுதல். பெங்களூரில் இருந்து வேலூர் நோக்கி சென்ற போது எஸ்.பி தனி படை போலீசார் நடவடிக்கை.
வாணியம்பாடி அருகே ரூ.5 லட்சம் மதிப்பிலான 630 கிலோ குட்கா பொருட்கள் வேனுடன் பறிமுதல். பெங்களூரில் இருந்து வேலூர் நோக்கி சென்ற போது எஸ்.பி தனி படை போலீசார் நடவடிக்கை.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வழியாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் காரில் கடத்திச் செல்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் மாவட்ட எஸ்பி தனிப்படை போலீசார் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி சுங்கச் சாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூரில் இருந்து வேலூர் நோக்கி சென்ற மினி வேனை நிறுத்தி சோதனை செய்த போது பிளாஸ்டிக் பெட்டிகள் வேனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அப்போது வேனில் வந்த இருவரிடம் விசாரணை செய்த போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலிசார் வேனை முழுவதும் மீண்டும் சோதனை செய்த போது வேனின் பின் புறம் உள்ள கூண்டிற்கு கீழே பிரத்தியேகமாக வடிவமைக்க பட்டிருந்த ரேக்கில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
மேலும் வேனில் வந்த 2 பேரிடம் போலிசார் நடத்திய விசாரணையில் அவர்கள் ஆம்பூர் அடுத்த மோதகபள்ளியை சேர்ந்த விக்னேஷ், வேலூர் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்த சரவணன் என்பதும் அவர்கள் குட்கா பொருட்களை பெங்களூரில் இருந்து வாங்கி வந்து வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து தனிப்படை போலிஸார் 2 பேரையும் கைது செய்து ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான 630 கிலோ குட்கா பொருட்களை வேனுடன் பறிமுதல் செய்து அம்பலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.