*திருவானைக்கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்*
திருவானைக்காவல் அருள்மிகு ஜெம்புகேஸ்வரர் – அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 17ம் தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து பங்குனி தேரோட்டத்திற்கான எட்டுத்திக்கு கொடியேற்றம் கடந்த 3ம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாள்தோறும் சுவாமியும், அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்துருளி 4ம் பிரகாரத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று(8.04.2024) காலை நடைபெற்றது. முதலில் தனித்தனி சிறிய தேரில் விநாயகர், முருகன் மற்றும் சண்டிகேஸ்வரர் உடன் எழுந்துருளி தேரோட்ட வீதிகளில் வளம் வந்து நிலைய அடைந்தனர்.
அதனை தொடர்ந்து சுவாமி தேரோட்டம் காலை 6:40 மணிக்கு தொடங்கியது. தேரை பக்தர்கள் நமசிவாய, நமசிவாய என்ற பக்தி கோசத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். தேர் தெற்க்ரத வீதியின் திருப்பத்தில் நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அம்மன் தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அம்மன் தேர் தென் வீதி வந்தவுடன் சுவாமி தேர் நிலை நிறுத்தப்பட்டு, பின்னர் அம்மன் தெரு நிலை நிறுத்தப்படும்.
தேரோட்டத்தில் திருச்சி மற்றும் சுற்றுப்புற ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.