‘கூகுள் மேப்’பை நம்பி பாலைவனம் சென்ற தெலுங்கானா வாலிபர், நண்பருடன் பலி

‘கூகுள் மேப்’பை நம்பி பாலைவனம் சென்ற தெலுங்கானா வாலிபர், நண்பருடன் பலி

ரசவுதி அரேபியாவின் பாலைவனத்தில் நான்கு நாட்களாக வழி தெரியாமல் சுற்றித் தவித்த தெலுங்கானாவைச் சேர்ந்த 27 வயது இளைஞரும், அவருடன் சென்ற நபரும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில் உள்ள தொலைதொடர்பு சேவை நிறுவனத்தில், தெலுங்கானாவின் கரீம் நகரைச் சேர்ந்த முகமது சேஷாத் கான், 27, பணியாற்றி வந்தார்.

இவர், தன்னுடன் பணிபுரியும் சூடான் நாட்டைச் சேர்ந்த நண்பருடன், உலகின் மிகவும் ஆபத்தான பாலைவனங்களில் ஒன்றான ரப் அலி காலி பாலைவனத்துக்கு சமீபத்தில் ஜீப்பில் சென்றார்.

மொத்தம் 650 கி.மீ., பரப்பளவு உடைய இந்த பாலைவனம் நஜ்ரான் மாகாணங்கள் உட்பட ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் மற்றும் ஏமன் வரை நீண்டுள்ளது.

இங்குள்ள சூழல்கள் மிகவும் ஆபத்தானது என்பதால், அங்கு யாரும் செல்வதில்லை. மொபைல் போனில் உள்ள கூகுள் மேப்பை நம்பி சென்ற அவர்கள், ஆபத்தான இடத்தில் சிக்கி வழி தெரியாமல் தவித்தனர்.

சோதனையாக, பேட்டரியும் தீர்ந்ததால் மொபைல் போனும் வேலை செய்யவில்லை.

உதவிக்கு யாரையும் அழைக்க முடியாத சூழலில், எதிர்பாராதவிதமாக ஜீப்பிலிருந்த எரிபொருளும் தீர்ந்தது.

இதனால், வழி தெரியாமல், எங்கும் செல்ல முடியாமல் சேஷாத் கான் மற்றும் அவரது நண்பர் இருவரும் நான்கு நாட்கள் பாலைவனத்தில் சுற்றித் திரிந்தனர். ஒரு கட்டத்தில் உணவும், தண்ணீரும் இல்லாமல் இருவரும் சோர்வடைந்தனர்.

வெப்பம் உச்சத்தில் இருந்ததால், நீரிழப்பு மற்றும் கடுமையான சோர்வு காரணமாக இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இருவரும் பணிக்கு வராததை அடுத்து, அலுவலகத்தில் இருப்பவர்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து நடத்திய தேடுதல் வேட்டையில், அவர்கள் இருவரின் உடல்களும் பாலைவனத்தில் இருந்து மீட்கப்பட்டன.

இது தொடர்பாக அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்