பிரியங்காவுக்கு ரூ.12 கோடி சொத்து; ரூ.15 லட்சம் கடன்; 550 பவுன் நகையும் இருக்கு!
வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்காவின் சொத்து மதிப்பு குறித்த விபரம் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம், வயநாடு லோக்சபா எம்.பி.,யாக வெற்றி பெற்ற ராகுல், ரேபரேலி எம்.பி., பதவியை தக்க வைத்துக் கொண்டு, வயநாடு எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலியான அத்தொகுதிக்கு, நவம்பர் 13ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பிரியங்காவும், இடது ஜனநாயக முன்னணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் சத்யன் மொகேரிவும், பா..ஜ., சார்பில் அக்கட்சியின் மாநில மகளிர் அணி செயலர் நவ்யா ஹரிதாஸூம் போட்டியிட்டுள்ளனர்.
வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட பேரணியாக சென்று பிரியங்கா வேட்புமனு தாக்கல் செய்தார். பிரியங்காவுக்கு காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில், பிரியங்கா வேட்புமனுவோடு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் இடம்பெற்றுள்ள சொத்து விபரங்களின் தகவல்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தனது மொத்த சொத்து மதிப்பு ரூ.12 கோடி எனவும், 2023 – 24ம் ஆண்டின் வருமானம் ரூ.46.39 லட்சம் எனவும் குறிப்பிட்டுள்ளார். அசையும் சொத்து ரூ.4.24 கோடியும், அசையா சொத்துக்கள் ரூ.7.74 கோடியும், ரூ.1.15 கோடி மதிப்புள்ள 4,400 கிராம் தங்கமும் இருப்பதாக பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
டில்லியில் பரம்பரை சொத்தாக விவசாய நிலம் மற்றும் வீடு இருப்பதாகவும், இமாச்சல் மாநிலம் ஷிம்லாவில் ரூ.5.63 கோடியில் சொந்த வீடு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். கணவர் ராபர்ட் வத்ராவுக்கு ரூ.37.90 கோடி அசையும் சொத்துக்களும், ரூ.27.64 கோடி அசையா சொத்துக்களும் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ரூ.15 லட்சம் கடன் இருப்பதாகவும், அவர் மீது 2 எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வனத்துறை நோட்டீஸ் அனுப்பி இருப்பதையும் பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.