தகனம் செய்யப்பட்ட நபர் உயிரோடு வந்தார். மயிலாடுதுறையை பரபரப்பாக்கிய சம்பவம்.

தகனம் செய்யப்பட்ட நபர் உயிரோடு வந்தார். மயிலாடுதுறையை பரபரப்பாக்கிய சம்பவம்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மேலப்பாதி பகுதியில் கடந்த 22ம் தேதி அடையாளம் தெரியாத வகையில் ஆண் ஒருவர் காவிரி ஆற்றில் மூழ்கி இறந்து கிடந்தார். தகவல் அறிந்த செம்பனார்கோவில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்தனர்.

அப்போது ஆற்றில் மூழ்கி இறந்தது மருதூர் லட்சுமி நாராயணபுரத்தைச் சேர்ந்த செல்வராஜ் (62) என்பது தெரியவந்தது.

செம்பனார்கோவில் காவல்நிலையத்தில் செல்வராஜின் மனைவி சாந்தி அளித்த புகாரின் பேரில் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு செல்வராஜ் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இறுதி காரியங்களுக்கு பிறகு உடலை குடும்பத்தினர் தகனம் செய்துள்ளனர்.

இந்நிலையில் இன்றைய தினம் வெளியூரிலிரந்து மருதூர் கிராமத்திற்கு செல்வராஜ் வந்துள்ளார். செல்வராஜ் உயிரோடு வந்து நின்றதை கண்ட கிராமத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அப்போதுதான் செல்வராஜ் என்று கருதி அடையாளம் தெரியாத உடலை தகனம் செய்தது தெரிய வந்தது.

இதுபற்றி செல்வராஜ் கூறுகையில், “என் மனைவி சாந்தி மகன் மற்றும் மகள்கள், மாந்தை கிராமத்தில் தற்போது வசித்துவருகின்றனர். நான் எனது சொந்த ஊரான மருதூர் பகுதிக்கு சென்றிருந்தேன். பின் சில நாட்களில் திருப்பூரில் உள்ள எனது முதலாளியை பார்க்க சென்று அங்கே வேலை செய்தேன். இப்போது மீண்டும் ஊருக்கு வந்தபோது என்னை பார்த்து எல்லோரும் அதிர்ச்சியடைந்துவிட்டன. ஆற்றில் மிதந்துவந்த உடலைக்கண்டு, நான் இறந்துவிட்டதாக நினைத்த என் குடும்பத்தினர் அதனை தகனம் செய்துள்ளனர்” என்றார்.

செல்வராஜ் தனது குடும்பத்தினரிடம் “30 படைத்துவிட்டீர்களா? சரக்கு வைத்து படைத்திருப்பீர்கள்… எங்கே சரக்கு?” என்று கேட்டுள்ளார். மேலும், “நான் 100 வயதில்தான் சாவேன். எனக்கு இப்போது சாவு இல்லை” என்று தெரிவித்தார்.

உயிருடன் உள்ள நபர் இறந்துவிட்டதாக கருதி யாரென்று தெரியாத உடல் தகனம் செய்யப்பட்ட இச்சம்பவம் குறித்து செம்பனார்கோவில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்