தமிழக-கேரள எல்லை பகுதியில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணி குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம், தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களின் எல்லையில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் எந்த ஒரு சட்ட விரோத செயல்கள் நடைபெறாத வண்ணம் பாதுகாத்து தடுத்து நிறுத்தும் விதமாக இரு மாநில காவல்துறையினர் இணைந்து ஆலோசனைக் கூட்டமானது இன்று கேரளா மாநிலம் ஆரியங்காவில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் மற்றும் கொல்லம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சாபு மேத்யூ ஆகியோர் தலைமையில் மாவட்ட வன அலுவலர், மதுவிலக்கு காவல்துறையினர், போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் பிற அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக கேரள எல்லை பகுதிகளில் மேற்கொள்ளக்கூடிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், சபரிமலை கோவில் சீசன் நடைபெற்று வரும் நிலையில் போக்குவரத்து நெரிசல் மீது கூடுதல் கவனம் செலுத்துவது தொடர்பாகவும், அடுத்தடுத்து வரக்கூடிய கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை காலங்கள் நெருங்கி வருவதால் எல்லைப் பகுதி வழியாக போதை பொருட்கள் கடத்தல் போன்ற எந்த ஒரு சட்ட விரோதமான செயலும் நடைபெறாத வண்ணம் கண்காணிப்பது குறித்தும், மேலும் வனப்பகுதியில் சட்டவிரோத செயல்கள் நடைபெறாமல் தடுத்து நிறுத்த வனப்பகுதியில் தொடர்ந்து ரோந்து பணி மேற்கொள்வது குறித்தும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.