குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு. குடும்பத்தினர் சோகம்.
குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு. குடும்பத்தினர் சோகம்.
குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காப் நகரில் 6 மாடிகளை கொண்ட குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள் ஏராளமானோர் தங்கியுள்ளனர். இந்த நிலையில் கட்டிடத்தின் சமையலறையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் திடீரென தீப்பிடித்தது.
இந்த தீ கட்டிடம் முழுவதும் பரவியதில், கட்டிடம் முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. தீயில் சிக்கி கொண்ட தொழிலாளர்கள் பதற்றத்தில் கட்டிடத்தில் இருந்து வெளியே ஓடி வந்தனர். கட்டிடத்தில் இருந்து தொழிலாளர்கள் பலர் வெளியே ஓடி தப்பிய நிலையில், அறைகளில் தூங்கி கொண்டிருந்தவர்கள் உள்ளே சிக்கி கொண்டனர்.
காப்பாற்றும் படி அவர்கள் சத்தம் போட்டனர். இந்த தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் பல மணி நேர போராட்டத்துக்கு பின் தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில்,40 இந்தியர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் இந்த தீ விபத்தில் ராமநாதபுரத்ம் தென்னவனூர் பகுதியைச் சேர்ந்த கருப்பண்ணன் ராமு என்பவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த கருப்பண்ணன் ராமு குவைத் நாட்டில் தங்கி சூப்பர் மார்க்கெட்டில் வேலைபார்த்து வருகிறார்.
குவைத் அகமதி மாகாணத்தின் மங்காப் நகரில் உள்ள கட்டிடத்தில் அவர் தங்கியிருந்ததாகவும், அதில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் தற்போது கருப்பண்ணன் ராமு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவருடன் பணியாற்றி வந்த உறவினர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். குவைத்தில் சென்று பணியாற்றி வந்த கருப்பண்ணன் ராமு தீ விபத்தில் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அவர் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.