குமரி மாவட்டத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைத்திட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

குமரி மாவட்டத்தில்
சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைத்திட வேண்டும் –
சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

சித்த மருத்துவம் தமிழ்நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஒன்றாகும். சித்தர்களால் உருவாக்கப்பட்ட இத்தகைய மருத்துவம் இயற்கை மூலிகைகள், தாதுக்கள், யோகம், நாடி பரிசோதனை போன்றவற்றை அடிப்படையாக கொண்டு உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டது. தமிழகத்தில் சென்னை- அரும்பாக்கம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அரசு சார்பிலும், குமரி, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தனியார் சார்பிலும் சித்த மருத்துவ கல்லூரிகள் செயல்படுகிறது. இவை Dr.எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலைகழகத்தின் கீழ் இயங்கி வருகிறது.

இந்நிலையில் சித்த மருத்துவத்தை மேம்படுத்திடும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசு சித்த மருத்துவ பல்கலைகழகத்தினை அமைக்க முடிவு எடுத்தது. இந்தியாவில் முதலாவதாக உருவாகும் இப்பல்கலை மூலம் சித்த மருத்துவத்தை அறிவியல் அடிப்படையில் ஆய்வு செய்வதற்கும் முறையான கல்வி மற்றும் பயிற்சியை வழங்குவதற்கும் பாரம்பரிய மருத்துவ முறைகளை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் இதன்மூலம் உரிய பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டது.

இதன்படி கடந்த 2022 ஏப்27ல் தமிழ்நாடு சட்டபேரவையில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கென மாதவரம் பகுதியில் 25 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் இதற்கு ஆளுனர் ஒப்புதல் தராததால் கிடப்பில் உள்ளது. இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்கு மிகவும் ஏற்புடையது குமரி மாவட்டம் ஆகும். இயற்கை வளங்கள் மற்றும் மூலிகைகள் நிரம்பிய இம்மாவட்டத்தில் சித்த மருத்துவத்திற்கு தேவையான மூலிகைகள் எளிதில் கிடைக்கின்றன.

குமரி மாவட்டத்தில் உள்ள கிராமபுறங்களில் பாரம்பரிய சித்த மருத்துவர்கள் (வைத்தியர்) மக்களுக்கு மூலிகை அடிப்படையிலான சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் சித்தர்களின் நூல்கள், அனுபவ அறிவை பயன்படுத்தி மருத்துவம் செய்து வருகின்றனர்.மாவட்ட மக்களின் ஆரோக்கியத்திற்கு சித்த மருத்துவம் பெரும் பங்காற்றி வருகிறது. ஆரல்வாய்மொழி முதல் ஆறுகாணி வரை நீண்டு கிடக்கும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி உயிர்காக்கும் மூலிகைகளின் வாழ்விடமாக உள்ளது.

இயற்கை வளங்களும், பாரம்பரிய அறிவும் இணைந்த குமரி மாவட்டத்தில் சித்த மருத்துவ பல்கலைகழகம் அமைப்பதே பொருத்தமானதாகும். இங்குள்ள பேச்சிப்பாறை மூலிகைப்பண்ணை கவனிப்பாரற்று கிடக்கிறது. அரியவகை மூலிகைகள் நிறைந்த மருந்து வாழ் மலை அழிவின் விளிம்பில் நிற்கிறது. இப்பகுதிகளில் இப்பல்கலை அமைப்பதால் மூலிகை வளம் காக்கப்படுவதோடு மேலும் பல்வேறு ஆய்வுகள் மூலம் சித்த மருந்துவம் உலகளவில் அங்கீகரிக்க வாய்ப்பாகும்.இதனை கவனத்தில் கொண்டு குமரியில் சித்தமருத்துவ பல்கலைகழகம் அமைத்திட அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் துணை பொது செயலாளர் M.அல்அமீன் ஷாகுல் ஹமீது, குமரிகோட்ட செயலாளர் M.அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட தலைவர் T. குழந்தைசாமி, செயலாளர் P.சந்திரா மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர். மேலும் தமிழக முதல்வருக்கும் இதுகுறித்து கோரிக்கை மனு இயக்கம் சார்பில் அனுப்பபட்டு உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்