பணபலத்தாலும், அனுதாப அலையாலும் வேலூரில் வெற்றிக்கொடி கட்டும் ஏ.சி.சண்முகம். கடைசி நேர முயற்ச்சி கை கொடுக்குமா கதிர் ஆனந்துக்கு?
பணபலத்தாலும், அனுதாப அலையாலும் வேலூரில் வெற்றிக்கொடி கட்டும் ஏ.சி.சண்முகம். கடைசி நேர முயற்ச்சி கை கொடுக்குமா கதிர் ஆனந்துக்கு?
வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பாக சிட்டிங் எம்.பி. கதிர் ஆனந்த், பாஜக சார்பில் கூட்டணி கட்சியான புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம், அதிமுக சார்பில் மருத்துவர் பசுபதி, நாம் தமிழர் கட்சி சார்பில் மகேஷ் ஆனந்த் ஆகியோர் வேட்பாளர்களாக களத்தில் நிற்கிறார்கள்.
வேலூர் மக்களவைத் தொகுதியில், வேலூர், அனைக்கட்டு, கீழ்வைத்தினாங்குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய இரண்டு தொகுகள் திருப்பத்தூர் மாவட்டத்திலும், மற்ற 4 தொகுதிகள் வேலூர் மாவட்டத்திலும் உள்ளன.
கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார். முன்னதாக, பணப்பட்டுவாடா புகாரில் வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. அதன் பின்னர், நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார். குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் ஏ.சி.சண்முகம் தோல்வியை தழுவினார்.
வேலூர் தொகுதியின் தற்போதைய கள நிலவரம், திமுக, அதிமுக, பாஜக என மும்முனை போட்டியே நிலவுகிறது. இந்த தொகுதியில் பாஜகவுக்கு பெரிதாக வாக்கு வங்கி இல்லை என்றாலும், ஏ.சி.சண்முகத்துக்கு தனிப்பட்ட செல்வாக்கு இருப்பதால், இந்த தொகுதியில் மும்முனை போட்டி நிலவுகிறது.
கதிர் ஆனந்துக்கு பணம் பலம் இருந்தாலும் தொகுதிக்கு பெரிதாக ஏதும் செய்யவில்லை. கட்சிக்காரர்களையே அனுசரித்து செல்வதில்லை என்ற குற்ற்ச்சாட்டு உள்ளது. ஆனால் பண பலம், தனிநபர் செல்வாக்கு உள்ளிட்டவை பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு பக்க பலமாக பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே பல்வேறு கட்சிகளின் சார்பில் கூட்டணியில் போட்டியிட்டுள்ள ஏ.சி.சண்முகம் இந்த தேர்தல்தான் தனது கடைசி தேர்தல் என கூறியுள்ளார். 2014, 2019 தேர்தல்களில் இரண்டாம் இடம் பிடித்து தோல்வியுற்றதால் ஏற்பட்டுள்ள அனுதாபம், தொகுதியில் சொந்த செலவில் நலத்திட்ட உதவிகளை செய்து வருவதும் அவருக்கு பலமாக பார்க்கப்படுகிறது. ஆனால், இது எந்த அளவுக்கு தேர்தலில் கை கொடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அதிமுகவை பொறுத்தவரை பாஜக கூட்டணியில் இருந்து விலகியது அக்கட்சிக்கு பலமாக பார்க்கப்படுகிறது. ஆனால், அதிமுக, பாஜக ஆகிய எந்த கட்சிக்கு வாக்களித்தாலும் அது பாஜகவுக்கு ஆதரவாகத்தான் இருக்கும், சிறுபான்மையினர் வாக்குகளை பிரிக்கவே பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியுள்ளது ஆகிய பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. வேட்பாளர் பசுபதி தொகுதிக்கு பெரிதாக அறிமுகம் இல்லாதவர். இது அக்கட்சிக்கு சறுக்கலை ஏற்படுத்தும் என தெரிகிறது.
வேலூர் தொகுதியில் கதிர் ஆனந்த் நன்கு அறியப்பட்டவர். வேலூர் சட்டமன்ற முஸ்லிம் வாக்காளர்கள் கை கொடுப்பார்கள் என்றாலும் வேலூர் தொகுதியில் கதிர் ஆனந்த் மீண்டும் வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றே சொல்கிறார்கள். பணத்தை அள்ளி இறைக்கும் ஏ.சி.சண்முகம் இந்த முறை குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் கறை ஏறுவார் என்பதே கள நிலவரம்.
கடைசி நேர பிரச்சார மற்றும் பண பட்டுவாடா யுக்தியை கையாண்டால் கதிர் ஆனந்துக்கு போட்டி பலமாகவே இருக்கும்.