வக்பு திருத்த மசோதாவுக்கு கூட்டணி கட்சிகள் நெருக்கடி.

வக்பு திருத்த மசோதாவுக்கு கூட்டணி கட்சிகள் நெருக்கடி.

வக்பு திருத்த மசோதாவின் சில பிரிவுகள் குறித்து, ஆளும் கூட்டணியில் உள்ள மூன்று முக்கிய கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், பீஹார் முதல்வர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி ஆகியவை முக்கிய கட்சிகளாக உள்ளன.

இந்தக் கட்சிகளின் ஆதரவே, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க முடிந்தது.

இந்நிலையில், வக்பு வாரிய சொத்துகள் நிர்வாகத்தில் மாற்றங்கள் செய்யும் வகையில், வக்பு திருத்த மசோதா, லோக்சபாவில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் பல பிரிவுகளுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. முஸ்லிம்களுக்கு இந்த மசோதா எதிரானது என்று அவை விமர்சனம் செய்தன.

இதையடுத்து, இந்த மசோதா பார்லிமென்ட் கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. இந்த மசோதாவின் சில பிரிவுகள் தொடர்பாக, லோக் ஜனசக்தி, தெலுங்கு தேசம் ஆகியவை ஏற்கனவே தங்களுடைய சில கவலைகளை தெரிவித்திருந்தன.

பார்லிமென்டில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, ஐக்கிய ஜனதா தளத்தின் ராஜிவ் ரஞ்சன் அதை ஆதரித்து பேசினார். இந்நிலையில், பார்லிமென்ட் கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.

அப்போது, இந்த மசோதாவின் சில பிரிவுகள் தொடர்பாக ஐக்கிய ஜனதா தளமும் கேள்விகளை எழுப்பியுள்ளது. இது, ஆளும் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீஹார் சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது. அங்கு மக்கள்தொகையில், 18 சதவீதம் முஸ்லிம்கள் உள்ளனர்.

கட்சியின் சில மூத்த தலைவர்கள், இந்த மசோதாவுக்கு முழு ஆதரவு அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, கூட்டுக்குழு கூட்டத்தில், மசோதா குறித்து ஐக்கிய ஜனதா தளம் கேள்வி எழுப்பிஉள்ளதாக தெரிகிறது.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்