வறுமையிலும் நேர்மை தவறாத ஆட்டோ ஓட்டுனர். சால்வை அணிவித்து பாராட்டிய கிராமிய காவல் ஆய்வாளர்.
வறுமையிலும் நேர்மை தவறாத ஆட்டோ ஓட்டுனர். சால்வை அணிவித்து பாராட்டிய கிராமிய காவல் ஆய்வாளர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் பிரகாஷ். இவர் ஆட்டோ ஓட்டி பிழைத்து வரும் நிலையில் நேற்று வாணியம்பாடியில் இருந்து கிரிசமுத்திரம் நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது தேசிய நெடுஞ்சாலை ஓரமாக பர்ஸ் ஒன்று கிடைத்துள்ளது. இதனை எடுத்து திறந்து பார்த்த போது அதில் 19,900 ரூபாய் இருப்பதை கண்டு உடனடியாக வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வாளர் பேபியிடம் ஒப்படைத்தார்.
பணத்தை இழந்தவர்கள் கஷ்டப்படுவார்கள் என நான் நினைத்ததாலேயே அதனைக் கொண்டு வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தேன். வறுமையிலும் நேர்மையாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநரை காவல் ஆய்வாளர் பேபி சால்வை அணிவித்து பாராட்டினார்.
இதனை தொடர்ந்து பர்சில் இருந்த கூட்டுறவு கடன் சங்க ரசிதை வைத்து உடனடியாக சம்பந்தப்பட்டவர்களை வரவழைத்து விசாரித்த போது பாதிக்கப்பட்டவர் வாணியம்பாடி அடுத்த சம்மந்திகுப்பம் பகுதியைச் சேர்ந்த நிரோஷா என்பது தெரிய வந்தது.
தொடர்ந்து நிரோஷாவிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் கூறியதாவது:
தான் ஆம்பூரில் உள்ள தனியார் காலணி தொழிற்சாலையில் வேலை செய்து வருவதாகவும், தன்னுடைய மகள் சுஷ்மிதா வாணியம்பாடியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருவதாகவும், கல்லூரி கட்டணம் கட்ட நகையை கூட்டுறவு வங்கியில் அடகு வைத்து, பணத்தை பெற்று இருசக்கர வாகனத்தில் மகள் உடன் கல்லூரி கட்டணம் கட்ட சென்று கொண்டு இருந்த போது வழியில் பர்ஸ் தவறி விட்டதாக கூறினார்.
இதனை தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநரின் கையாலேயே அவர்களுக்கு பணத்தை காவல் ஆய்வாளர் பேபி வழங்கினார்.
பணத்தை தவறவிட்டவர்கள் கண்ணீர் மல்க ஆட்டோ ஓட்டுனருக்கு நன்றி தெரிவித்தனர்.