பழிபோட்டவரை பலிபோடும் நம்பிக்கை; கொல்லங்குடியில் நீதி தேவதையாக பார்க்கப்படும் காளி தெய்வம்!
சிவகங்கை மாவட்டம் மட்டுமல்லாது பல மாவட்டங்களில் இருந்தும், ஏன் தலைநகர் சென்னையில் இருந்தும் கூட மக்கள் கூட்டம் கூட்டமாய் வந்து வணங்கி தன் குறைகளைக் கூறி மன நிம்மதி அடைகின்றனர்.
‘மதுரை தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் சிவகங்கையிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிற்றூர் தான் கொல்லங்குடி. இன்று கொல்லங்குடி என்று அழைக்கப்பட்டாலும் இது 13-ம் நூற்றாண்டு கல்வெட்டில் கொல்லன்குடி என்று பதிவாகியுள்ளது.
தச்சு வேலை, தங்க வேலை செய்பவர்களை, கொல்லர்கள் என்று அழைப்பது பொது வழக்கு. அப்படிப்பட்ட இடமாகவே இது விளங்கியிருக்க வேண்டும். மருது பாண்டியர்கள் காலத்திலும் ஆயுதம் செய்யும் பட்டறை இருந்ததாகக் கூறப்படுகிறது. இவ்வூர் பகுதியில் பரவலாக பெருங்கற்கால இரும்பு உருக்காலை எச்சக் கழிவுகள் காணப்படுகின்றன. ஊர் மக்களிடம் இவ்வூர் 300 ஆண்டுகள் பழமையானது என்ற கருத்தே நிலவுகிறது. ஆனால் தரவுகளின் அடிப்படையில் இவ்வூர் மிகப்பழமையானதாக உள்ளது.
கொல்லங்குடியைச் சுற்றி எண் திசையிலும் வாழக்கூடிய மக்களின் நீதி தேவதையாக விளங்குவது கொல்லங்குடி காளியம்மனாகும். பொதுவாக வெள்ளி, செவ்வாய், ஞாயிறு பௌர்ணமி, அமாவாசை போன்ற நாள்களில் அதிகமான மக்கள் வந்து வழிபட்டுச் செல்வார்கள். கோயிலில் பூசை செய்து வரக்கூடிய மரபினரின் முன்னோர்கள் இக்காளியை இங்கு உண்டு பண்ணியதாக கூறுகின்றனர்.
சிவகங்கை வேலுநாச்சியார் காலத்தில் சிவகங்கை அரசர் முத்து வடுகநாதருக்கும் கும்பெனியாருக்கும் காளையார்கோவிலில் நடந்த போரில் முத்து வடுக நாதர் இறந்தபோது வேலு நாச்சியார் தாண்டவராயன் பிள்ளை, மருது சகோதரர்கள் ஆலோசனையின் படி தப்பிச் சென்று திண்டுக்கல் ஹைதர் அலி கோட்டையை அடைந்தார். வேலுநாச்சியாரை தேடிச்சென்ற வெள்ளை யர்கள் இப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த உடையாளிடம் வேலுநாச்சியார் பற்றி கேட்க அவர் சென்ற பகுதி தெரிந்தும் காட்டிக் கொடுக்காது வெள்ளையரின் வாளால் வெட்டுப்பட்டு இறந்தாள். இறந்த உடையாளே வெட்டுடையாளாக, வெட்டுடைய காளியாக விளங்குவதாகவும், பின்னாளில் வேலுநாச்சியார் சிவகங்கையின் அரசு பொறுப்பேற்று பிறகு வைரத் தாலி ஒன்றை அம்மனுக்கு பரிசளித்ததாகவும் கூறுகின்றனர். இன்றும் மக்கள் திருட்டு, துரோகம், ஏமாற்றுதல் போன்ற செயல்களை தட்டிக் கேட்க எதிரியை பயமுறுத்த, நீதி கேட்க காசு வெட்டி வழிபட்டு வருகின்றனர்.
கொல்லங்குடியில் நடைபெறும் ஆடி 18ம்நாள் குதிரை எடுப்பு விழாவில் நகர் வணிகர் சங்கத்தினரால் பூத்தட்டு விழா காளியம்மனுக்கு மிகச் சிறப்பாக பல்லாண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. நவராத்திரி விழா அம்மன் அம்பு போடும் நிகழ்வும் பார்ப்பவரை மனம் கொள்ளச் செய்யும். பங்குனி மாதம் சுவாதிரை நட்சத்திரத்தில் பதினோரு நாள் திருவிழா நடைபெறுகிறது.
இதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில், வாகனத்தில் அம்மன் வந்து அருள் தருகிறார். ஒன்பதாம் நாளில் தேர்த் திருவிழாவும், பத்தாம் நாளில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. பதினோராம் நாளில் விடையாற்றி ஊஞ்சல் விழா.. நடைபெறுகிறது. இந்த பதினோரு நாட்களுக்கு மேலும் பால்குடம் எடுத்தல், தீச்சட்டி ஏந்துதல் போன்ற நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெறும். கோயில் நிர்வாகம் இந்து அறநிலைத்துறையினரால் நிர்வகிக்கப்படுகிறது.
பல அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கும் கொல்லங்குடி காளி, பக்தர்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் நிறைந்திருக்கிறாள்’ என்று தனது சொந்த ஊர் குறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர், புலவர் கா.காளிராசா பதிவு செயதுள்ளார்