சாஹல், ரபாடா, மில்லர்.. ஐபிஎல் மெகா ஏலத்தில் மிஸ் செய்த வீரர்களின் பட்டியலை வெளியிட்ட ஆர்சிபி!

சாஹல், ரபாடா, மில்லர்.. ஐபிஎல் மெகா ஏலத்தில் மிஸ் செய்த வீரர்களின் பட்டியலை வெளியிட்ட ஆர்சிபி!

ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆர்சிபி அணி தரப்பில் வாங்க முயற்சித்து மிஸ் செய்த வீரர்களின் பட்டியலை அந்த அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. டாப் ஆர்டர், மிடில் ஆர்டர், விக்கெட் கீப்பர், வேகப்பந்துவீச்சாளர்கள் என்று ஆர்சிபி அணி திட்டமிட்டபடி ஐபிஎல் மெகா ஏலத்தில் செயல்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

3 வாரங்களுக்கு முன் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற்ற நிலையில், ஆர்சிபி அணி நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டதாக பார்க்கப்பட்டது. ஹேசல்வுட், புவனேஷ்வர் குமார், சால்ட், லிவிங்ஸ்டன், டிம் டேவிட், ஜித்தேஷ் சர்மா, தேவ்தத் படிக்கல் என்று அந்த அணி வாங்கிய வீரர்கள் ஆர்சிபி ரசிகர்களை நிம்மதியடைய வைத்திருக்கிறது. ஸ்பின்னர்களை மட்டும் திட்டமிட்டபடி வாங்க முடியவில்லை என்று பலரும் சோகத்தை வெளிப்படுத்தினர்.

இதனால் க்ருனால் பாண்டியா மற்றும் சுயாஷ் சர்மா இருவரையும் வைத்து ஆர்சிபி அணி விளையாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக ஆர்சிபி அணி தரப்பில் யார் யாரை வாங்க திட்டமிடப்பட்டது என்பது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. அதன்படி, வெளிநாட்டு தொடக்க வீரர் ஒருவரை வாங்க ஆர்சிபி அணி முடிவு செய்திருக்கிறது.

அந்த திட்டத்திற்கு ஏற்ப பில் சால்ட் ரூ.11.50 கோடிக்கு ஆர்சிபி அணியால் வாங்கப்பட்டார். அதேபோல் நம்பர் 3ல் விளையாடுவதற்கு வெங்கடேஷ் ஐயரை வாங்க வேண்டும் என்று ஆர்சிபி நிர்வாகம் திட்டமிட்டிருக்கிறது. ஆனால் கேகேஆர் அணியால் ரூ.23.75 கோடிக்கு வெங்கடேஷ் ஐயர் வாங்கப்பட்டார். இதனால் ஆர்சிபி அணி வேறு வழியின்றி தேவ்தத் படிக்கலை அடிப்படை தொகைக்கு வாங்கி இருக்கிறது.

நம்பர் 4ல் விளையாட ரஜத் பட்டிதர் இருப்பதால், அவருக்கு பின் அதிரடி வீரர்கள் வர வேண்டும் என்று ஆர்சிபி அணி திட்டமிட்டுள்ளது. அதற்காக டேவிட் மில்லர், லியாம் லிவிங்ஸ்டன், டிம் டேவிட், ரோமன் பவல், டோனவன் ஃபெரைரா உள்ளிட்டோர் பரிசீலிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆர்சிபி அணி லிவிங்ஸ்டன் மற்றும் டிம் டேவிட் இருவரையும் வாங்கி இருக்கின்றனர்.

நம்பர் 6ல் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் வேண்டும் என்பதிலும் ஆர்சிபி நிர்வாகம் தீவிரமாக இருந்துள்ளது. அதனால் ஜித்தேஷ் சர்மாவை ரூ.11 கோடி கொடுத்து வாங்கி இருக்கிறது. நம்பர் 7ல் இந்திய பேட்ஸ்மேன் வேண்டும் என்று முடிவு செய்து க்ருனால் பாண்டியாவை வாங்கியுள்ளது. நம்பர் 8ல் வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர் இருக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்காக மிட்சல் ஸ்டார்க், ககிசோ ரபாடா, ஹேசல்வுட், நேதன் எல்லிஸ், துஷாரா உள்ளிட்டோர் பரிசீலிக்கப்பட்டு ஹேசல்வுட் மற்றும் துஷாரா இருவரையும் வாங்கி இருக்கிறது. இவர்களுக்கு மாற்று வீரர்களாக ரொமாரியோ ஷெப்பர்ட் மற்றும் இங்கிடி இருவரையும் வாங்கியுள்ளனர். தொடர்ந்து நம்பர் 9ல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் தேவை என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதற்காக நடராஜன், புவனேஷ்வர் குமார், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, ரஷிக் சலாம் ஆகியோர் பரிசீலனையில் இருந்துள்ளனர். இந்தப் பட்டியலில் இருந்து புவனேஷ்வர் குமாரை ரூ.10.75 கோடிக்கும், ரஷீத் சலாமை ரூ.6 கோடிக்கும் வாங்கி அசத்தியுள்ளது. அதேபோல் ஸ்பின்னர்களுக்கான பரிசீலனையில் சாஹல், தீக்சனா, ஆஃப்கானிஸ்தான் அணியின் அல்லா கசன்ஃபர், நூர் அஹ்மத் உள்ளிட்டோரை வாங்க முடிவு எடுத்து, எந்த வீரரையும் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்