திதி, தர்ப்பணம் கொடுக்க கட்டணம் வசூலிப்பதா? கொடுங்கோல் மன்னன் அவுரங்கசீப் ஆட்சியில் இருந்த அமைச்சர் போல செயல்படுகிறார் பி.கே.சேகர்பாபு.
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் எ.என்.எஸ். பிரசாத் அறிக்கை.
திதி, தர்ப்பணம் கொடுக்க கட்டணம் வசூலிப்பதா?
கொடுங்கோல் மன்னன் அவுரங்கசீப் ஆட்சியில் இருந்த அமைச்சர் போல செயல்படுகிறார் பி.கே.சேகர்பாபு.
இராமேஸ்வரம் அருள்மிகு இராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள், தங்களது முன்னோர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி, அக்னி தீர்த்தக் கரையில் புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம், பிண்ட பூஜை செய்வது வழக்கம். இதற்காக தங்களின் வசதிக்கேற்ப ரூ. 300 முதல் ரூ. 500 வரை புரோகிதர்களுக்கு தட்சிணையாக கொடுப்பார்கள்.
காலம் காலமாக தொடரும் இந்த பாரம்பரிய, ஹிந்து ஆன்மிக, கலாசார நடைமுறைக்கு ஹிந்து விரோத, நாத்திக திமுக அரசின் பிடியில் இருக்கும், ஹிந்து சமய அறநிலைத்துறை வேட்டு வைத்துள்ளது. ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கரையில் திதி, தர்ப்பணம், பிண்ட பூஜை செய்ய ரூ. 200 முதல் ரூ. 400 வரை வசூலித்து, அதிலிருந்து ரூ. 80, ரூ.160 வரை புரோகிதர்களுக்கு கூலி வழங்கப்படும் என, ஹிந்து விரோத, நாத்திக திமுக அரசின் பிடியில் இருக்கும் ஹிந்து சமய அறநிலைத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஹிந்து சமய அறநிலைத்துறை விதிகளின்படியே, கோயில் வழிபாடு, பூஜை, நம்பிக்கைகள் எதிலும் அத்துறை தலையிட முடியாது. அப்படி இருக்கும்போது, கோயிலுக்கு வெளியே திதி, தர்ப்பணம், பூஜை செய்யும் ஹிந்துக்களின் அடிப்படை கலாசாரத்தின் மீது எப்படி தலையிட முடியும்? திதி தர்ப்பணம் செய்வது என்பது பக்தர்களுக்கும், புரோகிதர்களுக்கும் உள்ள அடிப்படை உரிமை. இந்த உரிமையில் குறுக்கிட்டு கட்டணம் வசூலிப்பது, புரோகிதர்களுக்கு கூலி கொடுப்பேன் என்றெல்லாம் அடாவடித்தனமாக செயல்படுவது நமது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது.
ஹிந்து விரோத, நாத்திக திமுக அரசின் இத்தகைய செயல்பாடுகள், ஹிந்து கோயில்களை எல்லாம் இடித்து தரைமட்டமாக்கிய கொடுங்கோல் மன்னன் அவுரங்கசீப் ஆட்சியை நினைவுபடுத்துகிறது. அவுரங்கசீப் ஆட்சியில் சில ஹிந்துக்கள் அமைச்சர்களாக இருந்தார்கள். அவர்களது செயல்பாடுகள் ஹிந்துக்களுக்கு எதிராக கொடூரமாக இருந்தது. தற்போது திமுக அரசியல் ஹிந்து சமய அறநிலைத்துறை அமைச்சராக இருக்கும் பி.கே. சேகர்பாபு அவர்களின் செயல்பாடுகளும் அப்படித்தான் இருக்கின்றன. அவுரங்கசீப் அமைச்சரவையில் இருந்த அமைச்சர் போல கொடூரமாக செயல்பட்டு வருகிறார் சேகர்பாபு. திதி, தர்ப்பணம் கொடுக்க கட்டணம் வசூலிப்பது திமுக அரசின் திமிரையும் ஆணவத்தையும் காட்டுகிறது. இதுபோல மற்ற மதங்களின் வழிபாட்டு உரிமையில் திமுக அரசால் தலையிட முடியுமா? எனவே, ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கரையில் திதி, தர்ப்பணம் கொடுக்க கட்டண வசூலிக்கும் அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இல்லையெனில் அதற்கான விலையை திமுக அரசு கொடுக்க வேண்டி இருக்கும் என்று என்.எஸ்.பிரசாத், தமிழக பாஜக மாநில ஊடகப்பிரிவு தலைவர், தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.