மாவட்ட ஊராட்சி உதவி இயக்குநர் ஊராட்சி செயலாளர் மீது வன்கொடுமை வழக்கு. போலிசார் விசாரணை.
மாவட்ட ஊராட்சி உதவி இயக்குநர் ஊராட்சி செயலாளர் மீது வன்கொடுமை வழக்கு. போலிசார் விசாரணை.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே முதுவந்திடல் ஊராட்சித் தலைவராக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கௌரி மகாராஜன் உள்ளார்.
ஊராட்சி மன்ற தலைவர் கௌரி மகாராஜனை அதே ஊரைச்சேர்ந்த ஊராட்சி செயலாளர் ராஜ்குமார் சுதந்திரமாக நிர்வாகம் செய்யவிடாமல் தடுத்து வந்தார் என குற்றம் சாட்டப்பட்டது. அது மட்டுமின்றி ராஜ்குமார் ஏகப்பட்ட நிதி முறைகேடுகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார் எனவும் குற்றம்சாட்டப்பட்டது. இது குறித்து கௌரி மகாராஜன் சிவகங்கை கலெக்டரிடம் புகார் செய்ய ராஜ்குமார் வேறு ஊருக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் ராஜ்குமாரின் உறவினர் கேசவதாசன் ஊராட்சி உதவி இயக்குநராக பணி மாறுதல் பெற்று சிவகங்கைக்கு வந்ததால் புகாருக்கு உள்ளான ராஜ்குமாரை மீண்டும் முதுவன்திடல் ஊராட்சி செயலாளராக மாற்றம் செய்தார் என்கிறார்கள்.
அதிலிருந்து ஊராட்சி மன்ற தலைவி கௌரி மகாராஜனை ‘இருக்கையில் அமரக்கூடாது, தலைவர் பதவியை காலி பண்ணி விடுவேன்’ என மிரட்டியதோடு, சாதி ரீதியாகவும் இழிவடுத்தியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி பணியாளர்களுக்கு சம்பளம், ஊராட்சி நிர்வாகத்தின் வரவு செலவுகளை ஊராட்சி செயலாளர் ராஜ்குமாரே செய்து வந்தார்.
இந்நிலையில், ஊராட்சி மன்ற தலைவி கௌரி மகாராஜன், `தன்னை சாதி ரீதியாக இழிவுபடுத்தி, ஊராட்சி நிர்வாகத்தில் அதிகாரம் செலுத்தும் ராஜ்குமார், ஊராட்சி உதவி இயக்குநர் கேசவதாசன், பொறுப்பு ஊராட்சி செயலாளர் மகேஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், முடியாத பட்சத்தில் தலைவர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக’ ஊர் மக்களுடன் வந்து சிவகங்கை கலெக்டரிடம் கடந்த மாதம் புகார் கொடுத்தார். அதோடு பழையனூர் காவல் நிலையத்திலும் புகார் செய்தார்.
இந்த நிலையில் புகாரை விசாரித்த பழையனூர் காவல்துறையினர் ஊராட்சி செயலாளர் ராஜ்குமார், மாவட்ட ஊராட்சி உதவி இயக்குநர் கேசவதாசன், பொறுப்பு ஊராட்சி செயலாளர் மகேஸ்வரன் ஆகியோர் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.