ரயில்வே ஊழியர் பலிக்கு காரணம் தெரியுமா? வெளியான ‛ஷாக்’ தகவல்
ரயில்வே ஊழியர் பலிக்கு காரணம் தெரியுமா? வெளியான ‛ஷாக்’ தகவல்
பீஹாரில், ரயில் பெட்டிகளுக்கு இடையே சிக்கி ஊழியர் பலியான விவகாரத்தில், சக ஊழியருடனான ஒருங்கிணைப்பு இல்லாததே காரணம் என தெரியவந்துள்ளது.
பீஹாரின் பெகுசராய் மாவட்டத்தில் உள்ள பரவுனி ரயில் நிலைய சந்திப்புக்கு லக்னோ – பரவுனி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் வந்தது. ஐந்தாவது நடைமேடையில் இருந்த வண்டியில், இன்ஜினை கழற்றும் பணிக்கு அமர்குமார் ராவ் மற்றும் முகமது சுலைமான் ஆகிய ‘பாயின்ட் மேன்கள்’ நியமிக்கப்பட்டனர்.
இன்ஜினின் ‘கப்ளிங்’கை பிரித்து மாற்றும் பணியில் அமர் ஈடுபட்டார். நடைமேடையில் இருந்தபடி, இது தொடர்பான தகவலை இன்ஜின் டிரைவருக்கு சுலைமான் கூறிக்கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக ரயில் இன்ஜின் பின்னோக்கி நகர்ந்தது. இதில், இன்ஜின் மற்றும் பெட்டிக்கு நடுவே சிக்கி அமர்குமார் பலியானார். இன்ஜினை முன்னோக்கி இயக்குவதற்கு பதிலாக, பின்னோக்கி இயக்கியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இதற்கிடையே, விபத்து தொடர்பாக பரவுனி ரயில் நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், ஊழியர்களிடையே தகவல் தொடர்பில் ஒருங்கிணைப்பு இல்லாததே விபத்துக்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில், ‘லக்னோ – பரவுனி எக்ஸ்பிரஸ் ரயில் காலை 8:10 மணிக்கு பரவுனி சந்திப்பிற்கு வந்தது. காலை 8:29 மணிக்கு இந்த விபத்து நடந்தது அங்குள்ள கேமராக்களில் பதிவாகியுள்ளது. இன்ஜின் மற்றும் பெட்டிகளின் நடுவே ‘கப்ளிங்’கை கழற்றிய அமர்குமாரின் நிலை குறித்து சக பணியாளரான முகமது சுலைமான், இன்ஜின் டிரைவருக்கு உரிய தகவல் தராததாலேயே இந்த விபத்து நடந்துள்ளது.
‘அதேபோல், ‘கப்ளிங்’ கழற்றப்பட்டது தொடர்பான உறுதியான தகவலை பெறாமலேயே இன்ஜின் டிரைவர் ரயிலை இயக்கியுள்ளார். சுலைமான் மற்றும் டிரைவர் இடையிலான தகவல் தொடர்பில் ஒருங்கிணைப்பு இல்லாததால் அமர்குமார் பலியானார்’ என, கூறப்பட்டுள்ளது.