பணம் செலுத்தி 24 ஆண்டுகளாகியும் குடிநீர் வினியோகமின்றி மக்கள் சிரமம்.
பணம் செலுத்தி 24 ஆண்டுகளாகியும் குடிநீர் வினியோகமின்றி மக்கள் சிரமம்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி 2வது வார்டு புதுநகரில் 24 ஆண்டுகளாக பணம் கட்டியும் குடிநீர் வினியோகம் இல்லை. மேல்நிலை குடிநீர் தொட்டி காட்சி பொருளாக உள்ளது. பரமக்குடி நகராட்சியில் மஞ்சள் பட்டணம், வைகை நகர், புது நகர் என 1வது வார்டாக இருந்தது.
கடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது வார்டு மறுவரை செய்யப்பட்டதில், 3 பகுதிகளும் 3 வார்டுகளாக பிரிக்கப்பட்டது. இதன்படி புதுநகர் 2வது வார்டில் உள்ளது. 700 குடும்பங்கள் வரை வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள் கடந்த 2000ம் ஆண்டில் குடிநீர் இணைப்பிற்காக நகராட்சிக்கு ரூ.2500 வைப்பு தொகை செலுத்தினர். தற்போதும் ரூ.10ஆயிரத்திற்கு மேல் பலர் செலுத்தியுள்ளனர்.
24 ஆண்டுகளாக குடிநீர் வழங்காத நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி சார்பில் புதுநகர் சிறுவர் பூங்காவில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதுவும் பயன்பாடு இல்லாமல் காட்சி பொருளாக உள்ளது.மக்கள் குடிநீரை விலைக் வாங்கி சிரமப்படுகின்றனர். இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என மக்கள் புலம்புகின்றனர். மேல்நிலை தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டுவந்து மக்களுக்கு குடிநீரை வழங்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.