ஏரியில் இறங்கி விவசாயிகள், பொது மக்கள் ஆர்ப்பாட்டம் இது தஞ்சை சோகம்.
ஏரியில் இறங்கி விவசாயிகள், பொது மக்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம். இது தஞ்சை சோகம்.
தஞ்சாவூர் மாவட்டம் பூதலுார் அருகே கடையக்குடி கிராமத்தில், 134 ஏக்கரில் அய்யனார்குருக்கள் ஏரி உள்ளது. இதன் வாயிலாக 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஏரிக்கு புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் இருந்து தண்ணீர் வரத்துக்கான நீர்வழிப்பாதை உள்ளது. இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக, புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் வராததால், விவசாயம் செய்ய முடியாமலும், போதிய குடிநீர் இன்றியும் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கண்டுக்கொள்ளாத நிலையில், நேற்று அய்யனார் குருக்கள் ஏரிக்குள் இறங்கிய பெண்கள் மற்றும் விவசாயிகள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ‘உடனடியாக புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில், கூடுதலாக தண்ணீரை திறந்து, ஏரியில் நீர் நிரப்ப வேண்டும்’ என கோஷமிட்டனர்.
கடையக்குடியில் கிட்டத்தட்ட 1,500 பேர் வசிக்கின்றனர். அய்யனார் குருக்கள் ஏரி வாயிலாக தான் சாகுபடி செய்கிறார்கள். இந்த ஏரிக்கு புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் இருந்த தண்ணீர் வரும். ஆனால் கடந்தாண்டு வராததால் ஏரியும் வறண்டு விட்டது. இந்த ஆண்டாவது விவசாயம் செய்யவும், குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் இருக்கவும் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர்.