அப்பா.. அப்பா.. கதறிய சிறுவன்..சபரிமலை கூட்டத்தில் காணாமல் போன தந்தையை தேடிய பாச போராட்டம் ♥️
சபரிமலை கூட்ட நெரிசலில் காணாமல் போன அப்பாவை கண்டுபிடித்து தரும்படி சிறுவன் ஒருவன் போலீஸ்காரரிடம் கைக்கூப்பி கண்ணீர் விட்டு கதறிய சம்பவம் பார்ப்போர் அனைவரையும் பதற வைத்துள்ளது.
கார்த்திகை மாதம் தொடங்கியுடன் சபரிமலை பக்தர்கள் மாலை அணிந்து ஐயப்பனுக்கு விரதம் தொடங்கி உள்ளனர். தற்போது சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டு மண்டல கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
மண்டல பூஜைக்கான நாட்கள் நெருங்க, நெருங்க, தினமும் ஒரு லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் கோவிலுக்கு வருவதாக கூறப்படுகிறது. இதனால் பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. இந்நிலையில் தான் தற்போது பக்தர்களின் எண்ணிக்கையை கட்டுக்கடங்காத வகையில் உள்ளதாக கூறப்படுகிறது. அதோடு பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கையை திருவிதாங்கூர் தேவசம் போர்டும், போலீசாரும் எடுக்கவில்லை என பக்தர்கள் குற்றச்சாட்டுக்களை வைக்கிறார்கள்.
இதனால் கடந்த ஒரு வாரமாக சபரிமலையில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே தான் பல பக்தர்கள் கூட்டத்தை பார்த்து மிரண்டு போய் தரிசனம் செய்யாமல் பந்தளத்தோடு சென்று விட்டு வீடு திரும்பி வருகின்றனர். நீலக்கல்லிலும் ஒவ்வொரு பேருந்திலும் மூட்டையை அடைப்பது போல் 150 க்கும் மேற்பட்ட பக்தர்களை பம்பை வரை அழைத்து செல்கின்றனர். கேரள அரசு பேருந்து டிரைவர் ஒருவர் போலிசார் தான் எங்களை அப்படி செய்ய சொல்கின்றனர். என்ற வீடியோவும் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் தான் தற்போது இணையதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி வருகிறது. இந்த வீடியோவும் நீலக்கல் பகுதியில் எடுக்ககப்பட்டுள்ளது என்கிறார்கள். ஏராளமான பக்தர்கள் வாகனம் ஒன்றில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அப்போது வாகனத்தில் இருந்த சிறுவனின் தந்தை காணாமல் போயுள்ளார். தனது தந்தை மாயமானதை அறிந்த அந்த சிறுவன் வாகனத்தின் ஜன்னல் வழியே பார்த்தபடி கதறி அழுதார். அப்போது அருகே போலீஸ்காரர் ஒருவர் வர தனது தந்தையை கண்டுபிடித்து தரும்படி அந்த சிறுவன் கைகளை கூப்பியபடி கெஞ்சி கோரிக்கை வைத்தார்.
இதற்கிடையே சிறுவனின் தந்தையும் அங்கு வந்தார். இதையடுத்து சிறுவன் தனது அழுகையை நிறுத்தினான்.
அந்த சிறுவன் தனது தந்தையை காணவில்லை எனக்கூறி கைகளை கூப்பி கதறி அழுத வீடியோ இணையதளங்களில் வெளியாகி பார்க்கும் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.