நாக்கில் எச்சில் ஊறும் மத்தி மீன் குழம்பு வைப்பது எப்படி?
நாக்கில் எச்சில் ஊறும் மத்தி மீன் குழம்பு வைப்பது எப்படி?
தேவையான பொருட்கள்
மத்தி மீன் – 3/4 முக்கால் கிலோ
சின்ன வெங்காயம் – 10
பூண்டு – 10 பல்
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
சின்ன தக்காளி – 1
மல்லித்தூள் – 3 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒன்றரை ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
நல்லெண்ணெய் – ஐந்து ஸ்பூன்
தாளிப்பதற்கு – கடுகு, கருவேப்பிலை சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
குழம்புக்கு வறுத்து அரைக்க தேவையான பொருட்கள்
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 10
தக்காளி – 1
தேங்காய் துருவல் – கால் மூடி
செய்முறை
புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும் .
மீனை நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்.
கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி மிளகு ,சீரகம், சின்ன வெங்காயம் போட்டு இரண்டு நிமிடம் வதக்கி அதனுடன் தக்காளியும் சேர்த்து நன்கு வதக்கவும் .
அதனுடன் தேங்காய் துருவலும் சேர்த்து நன்கு வாசனை வரை வதக்கி ஆறவைத்து அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து மிக்ஸி ஜாரில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பின்பு ஒரு கடாயில் எண்ணெய் உற்றி நறுக்கிய 10 சின்ன வெங்காயம், பூண்டு போட்டு நன்கு வதக்கவும்.
அதனுடன் மல்லித்தூள் ,மிளகாய்த்தூள் ,மஞ்சள்தூள் போட்டு பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி ,புளி கரைத்த தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு கடாயை மூடி 2 நிமிடம் வைத்தால் தக்காளி நன்கு வெந்து விடும்.
அதனுடன் அரைத்து வைத்த மசாலா ,மூன்று டம்ளர் தண்ணீர் குழம்புக்கு தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும் .
குழம்பு நன்கு கொதித்து ஓரளவு கெட்டியானவுடன் அதில் மீனை சேர்த்து கடாயை மூடி ஒரு கொதி விட்டு அடுப்பை 10 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கினால் மீன் நன்கு வெந்துவிடும்.
குழம்பை அடிக்கடி கிளற கூடாது மீன் உடைந்து விடும்.
தாளிப்பு கரண்டியில் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை போட்டு தாளித்து மீன் குழம்பில் ஊற்றினால் மிகவும் சுவையான மத்தி மீன் குழம்பு ரெடி