வேலை, கல்வியில் 5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும். மருத்துவர் சமூக நலச் சங்கம் கோரிக்கை.
வேலை, கல்வியில்
5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும். மருத்துவர் சமூக நலச் சங்கம் கோரிக்கை.
தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நலச் சங்கத்தின் சார்பில் சுதந்திர போராட்ட வீரர் எஸ்.எஸ். விஸ்வநாததாசின் 83- ம் ஆண்டு நினைவு தினம், புணரமைக்கப்பட்ட ஸ்ரீரங்கம் மாநகர சங்கத்தின் 6-ம் ஆண்டு துவக்க விழா, கல்வி உதவித்தொகை மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் முப்பெரும் விழா மற்றும் சமுதாய குடும்ப விழா ஸ்ரீரங்கத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம், வடக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ், வடக்கு மாவட்ட பொருளாளர் கலைமணி ஆகியோர் தலைமை தாங்கினர். ஸ்ரீரங்கம் மாநகர செயலாளர் ராஜலிங்கம், மாநகரப் பொருளாளர் குரு சேர்மா சங்கர்
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்மாரிமுத்து வரவேற்றார்.
விழாவில் பேராசிரியர் முத்து மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார்.
வழக்கறிஞர் ஹரிஹரன், தொழிலதிபர் மனோகர், மண்டல அமைப்பு செயலாளர் செந்தில்குமார், கொள்கை பரப்பு செயலாளர் மருத வீரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்.
சிறப்பு விருந்தினர்களாக லால்குடி நகர மன்ற உறுப்பினர் விஜயலட்சுமி ராஜேந்திரன், சமயபுரம் பேரூராட்சி உறுப்பினர் கனிமொழி ரெங்கபிரபு பொங்கல் பரிசு வழங்கி வாழ்த்துரை வழங்கினர்.
மருத்துவர் சமுதாய மக்களுக்கு தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் உள் ஒதுக்கீட்டில் 5 சதவீதம் வழங்க வேண்டும். மருத்துவ சமுதாயத்தை பி. சி. ஆர். சட்டம் வரைமுறைக்குள் கொண்டுவர வேண்டும். சுதந்திரப் போராட்ட வீரர் சுதந்திர போராட்டத்தில் 29 முறை சிறை சென்ற தியாகி எஸ்.எஸ். விஸ்வநாததாசிற்கு தபால்தலை வெளியிட வேண்டும், மருத்துவ சமூக மாணவர்களுக்கு மருத்துவ படிப்பான எம்.பி.பி.எஸ், ஆர்.ஐ. எம்.பி, செவிலியர் படிப்புகளில் முன்னுரிமை வழங்க வேண்டும். கிராமப்புறங்களில் முடி திருத்தம் செய்யும் நபர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் துணைத் தலைவர் பிரபாகரன், துணை செயலாளர் ஜீவரெத்தினம், இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரகுராமன் ஆகியோர் நன்றி கூறினர்.