கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் வீட்டில் வருமானவரித்துறை மதிப்பீட்டு அதிகாரிகள் ஆய்வு.
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் வீட்டில் வருமானவரித்துறை மதிப்பீட்டு அதிகாரிகள் ஆய்வு.
கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார், உறவினர் மற்றும் நண்பர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்த நிலையில், அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு மீது வெள்ளிக்கிழமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், கரூரில் வருமானவரித்துறை அதிகாரிகள் முகாமிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரான கொங்கு மெஸ் மணியின் அலுவலகம், புதிதாக கட்டி வரும் கட்டிடத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் புதன்கிழமையன்று ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், கரூர் ராம்நகர் பகுதியில் புதிதாக கட்டி வரும் பங்களாவில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையை மேற்கொண்டனர். தற்போது கட்டுமான பணிகள் நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், வருமானவரித்துறை சொத்து மதிப்பீட்டு குழுவினர், அசோக் கட்டிவரும் புதிய வீட்டின் மதிப்பு, பரப்பளவு, கட்டுமான செலவுகள் குறித்து மதிப்பிடும் பணியில் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இரண்டு கார்களில் வந்த 7 அதிகாரிகள் தற்போது அளவீடு செய்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.