தீக்குச்சி பற்றுவதில் கரிகாலன் தரப்பினர் கொடுக்கும் பணத்தில் தான் இருக்கிறது. திருச்சி நாடாளுமன்ற தொகுதி நிலவரம்… 

தீக்குச்சி பற்றுவதில் கரிகாலன் தரப்பினர் கொடுக்கும் பணத்தில் தான் இருக்கிறது.

திருச்சி நாடாளுமன்ற தொகுதி நிலவரம்… 

         திருச்சி மாவட்டத்தில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவரம்பூர், புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை ஆகிய தொகுதிகள் அடங்கியது தான் திருச்சி நாடாளுமன்ற தொகுதி. திமுக கூட்டணியில் மதிமுகவில்   துரை வைகோ. அதிமுகவில் புதுக்கோட்டை மணல் கருப்பையா, பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநகர் மாவட்ட செயலாளர்  செந்தில்நாதன், நாம் தமிழர் கட்சியில் வீர விளையாட்டு மீட்பு குழு தலைவர் ராஜேஷ் ஆகியோர் வேட்பாளர்களாக களத்தில் நிற்கின்றனர். 

      அதிமுக வேட்பாளராக களத்தில் இருக்கும் கருப்பையா. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆதரவு பெற்றவர். மண்ணின் மைந்தர். பத்து ஆண்டுகளுக்கு மேலாக   கட்சி பணி ஆற்றி வருகிறார். தற்போது புதுகோட்டை மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளராகவும் இருக்கிறார். பன்னீர் தேவர் அறக்கட்டளை மூலமாக புதுக்கோட்டையில் உள்ள சிலருக்கு மட்டுமே நல்லது செய்தவர். இவர் வேட்பாளர் ஆனதற்கு பிறகு தான் அந்த அறக்கட்டளை இருக்கும் விசயமும், கருப்பையா சில நல்ல விஷயங்களை பண்ணுகிறார் என்ற விபரமும் வெளி உலகத்துக்கு தெரிய வந்தது. இப்போது அந்த பன்னீர் அறக்கட்டளையில் பயன் பெற்றவர்களை வைத்தே கருப்பையாவுக்கு பெரிய அளவில் பில்டப் கொடுத்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள். 

    இவருடைய அண்ணன் தான் மணல் கரிகாலன், கோவையில் பாஜக அண்ணாமலை, வேலூரில் திமுக கதிர் ஆனந்த் திருச்சியில் கருப்பையா ஆகிய மூவரின் வெற்றிக்கு பணப்பட்டுவாடா செய்வதே கரிகாலன் தான் என்று சொல்லப்படுகிறது. இப்படி பாஜக, திமுக தொடர்பை வைத்து தம்பி கருப்பையாவை ஜெயிக்க வைக்க எத்தனை கோடி செலவானாலும் செலவழிக்க கரிகாலன் தயாராக இருக்கிறாராம். அதன்படி 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கும் பணம் கடைசி நேரத்தில் பெரிய அளவில் கொட்டப்போவதாக சொல்லப்படுகிறது. அதேபோல் திமுக தொடர்பில் உள்ள சிலரையும் சரி கட்டும் முயற்ச்சியில் கரிகாலன் தரப்பினர் இறங்கியுள்ளதாக சொல்கிறார்கள். மற்ற கூட்டணிகளை சேர்ந்த ஒரு பகுதியினர் கருப்பையாவின் கவனிப்பால் திரைக்கு பின்னால் ஆதரிக்க தயாராக இருக்கிறார்கள். இதனால் கருப்பையா எப்படியும் வெற்றி பெற்றுவிடலாம் என்று திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் தெம்பாகவே உலா வருகிறார். 

    ஆனால் 5 ஏக்கர் நிலத்திற்காக பட்டியல் சமுதாயத்தை சேர்ந்த ரவி என்ற இளைஞரை கொலை செய்த வழக்கில் அதிமுக வேட்பாளர் கருப்பையா அவரது அண்ணன் கரிகாலன் உள்ளிட்டவர்களை கைது செய்யாதது ஏன் என்று நீதிகேட்டு மறுமலர்ச்சி கழகம் சார்பாக அதன் தலைவர் பொன்முருகேசன்  கருப்பையாவை எதிர்த்து பேட்டி கொடுத்த  விசயம் கருப்பையாவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. பட்டியலினத்தவர்கள் மத்தியில் கருப்பையா நிற்பதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் மணல் விவகாரத்திலும் நில ஆக்கிரமிப்பு போன்ற விவகாரத்திலும் கருப்பையாவை பிடிக்காத கறம்பக்குடி, புதுக்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர் கருப்பையாவுக்கு எதிராக சைலண்டாக காய் நகர்த்தி வருகிறார்கள்.  

     திமுக கூட்டணியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ ஏற்கனவே திமுக மேடையில் செத்தாலும் உதயசூரியன் சின்னத்தில் நிற்கமாட்டேன். தனி சின்னத்தில் தான் நிற்பேன் என்று அமைச்சர்கள் நேரு மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் முன்னாடியே பேசியதையே திமுகவினர் ரசிக்கவில்லை. தொண்டர்களும் ஒத்துழைக்கவில்லை. கட்சி நிர்வாகிகள் மற்றும் மகளிரணி நிர்வாகிகள் பலரும் துரை வைகோவுக்கு வேலை செய்யாமல் பெரம்பலூரில் நிற்கும் அருண் நேருவுக்கு வேலை செய்ய போய்விட்டனர். இந்த நிலையில் பண பலத்தால் அதிமுக வேட்பாளரும் தாரளமாய் செலவு செய்ய அதிர்ந்து போன துரை வைகோ, வைகோவிடம் திருச்சி நிலவரம் சரியில்லை என்று சொல்ல அவர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்றாராம். 

   பின்னர் தான் அமைச்சர் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி என்று அனைத்து நிர்வாகிகளும் திருச்சி தொகுதியில் துரை வைகோவோடு சேர்ந்து பிரச்சாரத்தில் அதிரடி காட்டி வருகிறார்கள். இந்த நிலையில் திமுக வாக்குகளுக்கு தலா 250 ரூபாயை திங்கள்கிழமை இரவே வீடு வீடாக கொண்டு சேர்த்து விட்டார்கள் திமுக பிரமுகர்கள். அதிலும் சிலருக்கு போகவில்லை என்ற தகவலும் உலா வருகிறது. அதேபோல் அதிமுக தரப்பினர் இன்னும் பண பட்டுவாடா பண்ணவில்லை. திமுகவை விட அதிகமாக பணம் கொடுக்கும்  பட்சத்தில்  கரிகாலன் கனவு பலிக்க வாய்ப்பிருக்கிறது.

  அடுத்ததாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளராக மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில் நாதன் களத்தில் நிற்கிறார். இவரும் முக்குலத்தோர் வகுப்பை சேரந்தவர். எல்லோரையும் அனுசரித்து செல்லும் செந்தில்நாதனுக்கு பண பலம் தான் இவருடைய வெற்றியை நிர்ணயிக்கும் சக்தி என்கிறார்கள். கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு களத்தில் நிற்கும் செந்தில் நாதன் பம்பரமாய் தொகுதியை சுற்றி சுற்றி வருகிறார். அவருடைய சமுதாய வாக்குகளும் பாஜகவினர் வாக்குகளும் தன்னுடைய வெற்றிக்கு கை கொடுக்கும் என்ற நம்பிக்கையோடு களத்தில் நின்று வேலை செய்கிறார். இவர் பிரிக்கும் அதிகப்படியான வாக்குகள் அதிமுக வேட்பாளர் கருப்பையாவுக்குத்தான் பாதகமாக இருக்கும்.  

    அடுத்ததாக நாம் தமிழர் கட்சி சார்பாக ராஜேஷ் களத்தில் நிற்கிறார்.   ஜல்லிகட்டுக்கான கோரிக்கைகள் மற்றும் சலுகைகள் கோரி எந்த ஆளும் கட்சி தலைவராக இருந்தாலும் நேரில் சந்தித்து மனு அளிப்பவர். குறிப்பாக அனைத்து கட்சி நிர்வாகிகளை எளிதில் சந்திக்க கூடியவர். பணம் கொடுக்காமலே நாம் தமிழர் கட்சிக்கு வாக்குகள் விழும் தொகுதிகளில் திருச்சியும் ஒன்று அதற்காக ராஜேஷ் ஓயாமல் உழைத்து கொண்டிருக்கிறார்.

  தீக்குச்சி பற்றுவதில் கரிகாலன் தரப்பினர் கொடுக்கும் பணத்தில் தான் இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்