இது அவதூறு தான்; வழக்கை எதிர்கொள்ளுங்க; சி.வி., சண்முகத்திற்கு செக் வைத்த சுப்ரீம்கோர்ட்!
இது அவதூறு தான்; வழக்கை எதிர்கொள்ளுங்க; சி.வி., சண்முகத்திற்கு செக் வைத்த சுப்ரீம்கோர்ட்!
முதல்வராக இருப்பவரை ஒருமையில் தரம் தாழ்த்தி பேசுவது என்பது அவதூறு தான். வழக்கை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும்’ என முதல்வரை அவதூறாக விமர்சித்த வழக்கில் முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு சுப்ரீம்கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பரில் விழுப்புரம் கோலியனூரில் அ.தி.மு.க., கண்டன கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் பற்றி, முன்னாள் அமைச்சர் அமைச்சர் சி.வி.சண்முகம் அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசினார். இதையடுத்து, சி.வி. சண்முகத்துக்கு எதிராக விழுப்புரம் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யுமாறு சென்னை ஐகோர்ட்டில் சி.வி. சண்முகம் தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. விமர்சிக்கும்போது கண்ணியம், மரியாதை ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் என்று அ.தி.மு.க., மாஜி அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு சென்னை ஐகோர்ட் அறிவுரை வழங்கி இருந்தது. வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு தெரிவித்து விட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக சிவி.சண்முகம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். ‘நான் நேரடியாக முதல்வரை விமர்சிக்கவில்லை. தமிழக அரசை மட்டுமே விமர்சித்துள்ளேன். அதில் தவறொன்றும் இல்லை. வழக்குகளில் விசாரணை எதிர்கொள்ள உத்தரவிட்ட சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதித்து, என் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்’ என மனுவில் சி.வி சண்முகம் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கு இன்று (நவ.,26) சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “இந்த வழக்கை ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கிறோம். அதுவரையில் மாவட்ட நீதிமன்ற விசாரணைக்கு முன்னதாக வழங்கப்பட்ட இடைக்கால தடை தொடரும். மேலும் இந்த விவகாரத்தில் வழக்கின் விவரங்களை சுப்ரீம்கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
பொது வாழ்வில் உள்ளவர்கள் கொஞ்சமாவது கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும். ஒரு மாநிலத்தின் முதல்வராக இருப்பவரை ஒருமையில் தரம் தாழ்த்தி பேசுவது என்பது அவதூறு தான், அதை செய்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அதற்கான வழக்கை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.