கொச்சி டூ மூணாறு கடல் விமான சேவை; சோதனை ஓட்டம் சக்ஸஸ்!
கொச்சியில் இருந்து மூணாறுக்கு கடல் விமான சுற்றுலா சேவை துவங்கப்பட உள்ளது. இன்று கொச்சியில் இருந்து மாட்டுப்பட்டி வரை சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்ய, மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை கடல் விமான சேவையை அறிமுகம் செய்ய திட்டமிட்டது. கொச்சியில் இருந்து மூணாறு வரை கடல் விமான சேவை, இன்னும் 6 மாதங்களில் துவங்க உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் இன்று (நவ.,11) கொச்சியில் இருந்து மாட்டுப்பட்டி வரை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கொச்சியில் புறப்பட்ட கடல் விமானம், காலை 11 மணிக்கு மூணாறில் உள்ள மாட்டுப்பட்டி அணையில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.
விமானம் அதன் இலக்கை அடைய அரை மணி நேரம் மட்டுமே ஆகியது. அதேநேரத்தில் கொச்சியில் இருந்து மாட்டுப்பட்டி வரை சாலை மார்க்கமாக பயணம் செய்ய குறைந்தது 5 மணி நேரம் ஆகும்.
ஆறு மாதங்களுக்குள் சுற்றுலா பயணிகளுக்கான சேவையை விமானம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொச்சி, மூணாறு, வயநாடு, ஆலப்புழா மற்றும் பல இடங்களை இணைக்கும் வகையில் கடல் விமான சேவை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.
கடல் விமானம் தரையிறங்குவதற்கு இரண்டு மீட்டர் ஆழமும், புறப்படுவதற்கு சுமார் 800 மீட்டர் நீர் ஓடுபாதையும் மட்டுமே தேவை.
மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் மாநிலத்தில் கடல் விமான சேவை முன்மொழியப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் நீர்நிலைகளுக்கு இடையேயான தொடர்பை அதிகரிப்பதே இதன் நோக்கம்.
கடல் விமானத்தில் உள்ள வசதிகள் என்ன?
* கடல் விமானம் என்பது ஒரு சிறிய விமானம். இது தண்ணீரிலும், தரையிலும் செல்லும் திறன் கொண்டது.
* தண்ணீரில் ஜாலியாக பயணிகள் கடல் விமானத்தில் பயணம் செய்ய முடியும். விமானத்தின் அளவைப் பொறுத்து 9, 15, 17, 20 மற்றும் 30 பேர் வரை பயணிக்க முடியும்.
கடல் விமானம் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டதால், இடுக்கி மாவட்ட கலெக்டர் விக்னேஷ்வரி, இன்று மாட்டுப்பட்டி அணை மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் ட்ரோன் இயக்க தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தார்.
* கடந்த சில தினங்களுக்கு முன், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கடல் விமான சேவை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.