கூடங்குளம்: தொற்றுநோய் போல பரவும் புற்றுநோய்! களமிறங்கும் ஆளும் கட்சி பிரமுகர் விஜயாபதி ரஹ்மான். அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் வரவேற்பு.
கூடங்குளம்:
தொற்றுநோய் போல பரவும் புற்றுநோய்!
களமிறங்கும் ஆளும் கட்சி பிரமுகர் விஜயாபதி ரஹ்மான். அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் வரவேற்பு.
கூடங்குளம் ஊரைச் சேர்ந்த மாணவி செல்வி. கார்த்திகா கூடங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். முதுகில் கட்டியால் அவதிப்பட்டு வந்த அவருக்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் நெல்லை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி பொறுப்பாளர் திரு. நெல்லை ரஹ்மான் அவர்கள் தங்கை கார்த்திகாவின் முழு மருத்துவச் செலவையும் தான் ஏற்றுக்கொள்வதாக வாக்குறுதி அளித்து, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக கேள்விப்படுகிறோம்.
இன்னும் ஏராளமானோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பத்தைக் கருத்தில் கொண்டு, ரஹ்மான் பாதிக்கப்பட்ட மக்களின் மருத்துவச் செலவை கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் ஏற்க வேண்டும் என்றும், கூடங்குளம் பகுதியில் உலகத்தரம் வாய்ந்த புற்றுநோய் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைத்திருக்கிறார்.
மேற்படி கோரிக்கைகளை வலியுறுத்தி விரைவில் நீதிமன்ற அனுமதியுடன் கூடங்குளத்தில் உண்ணாவிரதப் போராட்டம் அவர் தலைமையில் நடக்கும் என்றும் அவர் அறிவித்திருக்கிறார்.
இந்தப் போராட்ட அறிவிப்பை அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் வரவேற்கிறது. அனைத்து உதவிகளையும், ஒத்துழைப்பையும் வழங்க அணியமாக இருக்கிறது.
திரு. ரஹ்மான் தலைமையிலான போராட்டம் கூடங்குளம் அணு உலையின் விரிவாக்கத் திட்டத்தையும், அணுக்கழிவுத் திட்டத்தையும் எதிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
3, 4, 5, 6, 7, 8 என்று மேலும் அணு உலைகள் கட்டப்படும்போது, மனிதர்கள் மட்டுமல்ல புள்ளினங்கள் கூட புற்றுநோயிலிருந்து தப்பிக்க முடியாது.
அதேபோல, கூடங்குளம் பகுதி மக்கள் மீது போடப்பட்டுள்ள 63 பொய் வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற தமிழக முதல்வரை திரு. ரஹ்மான் போராட்டம் கேட்டுக்கொள்ள வேண்டும். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, வள்ளியூரில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் ஐயா. மு.க. ஸ்டாலின் அவர்கள் “அனைத்து வழக்குகளையும்” திரும்பப் பெறுவோம் என்று அறிவித்தார் என்பதை அவருக்கு நினைவூட்ட வேண்டும். என்று அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.