36 ஆண்டுகள் வங்கதேச சிறையில் பொய் வழக்கில் சிக்கி தவித்தவர் நாடு திரும்பினார்
36 ஆண்டுகள் வங்கதேச சிறையில் பொய் வழக்கில் சிக்கி தவித்தவர் நாடு திரும்பினார்
அகர்தாலா: தாய்மாமனை பார்க்க வங்கதேச எல்லை தாண்டியவர், பொய் வழக்கில் கைதாகி 36 ஆண்டுகள் அங்கு சிறை தண்டனை அனுபவித்து நேற்று சொந்த மாநிலம் திரும்பிய சம்பவம் திரிபுராவில் நடந்துள்ளது.
திரிபுரா மாநிலம் கோமில்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷாஜஹான் மையா என்ற பைலாஷ்,62, கடந்த 1988-ம் ஆண்டு இந்திய -வங்கதேச சர்வதேச எல்லைப்பகுதியான ஸ்ரீமந்தாப்பூர் பகுதியில் வங்கதேச எல்லையை தாண்டியதாக அந்நாட்டு எல்லை பாதுகாப்பு படை வீரர்களால் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் தன் தாய்மாமனை பார்க்க வந்ததாக கூறினார்.
இதனை ஏற்காத எல்லை பாதுகாப்புபடை வீரர்கள் பாஸ்பார்ட் இன்றி அத்துமீறி எல்லைக்குள் புகுந்ததாக வழக்குப்பதிந்து கைது செய்து உள்ளூர் கோர்ட் மூலம் சிறையில் அடைந்தனர்.
எனினும் 11 ஆண்டுகளுக்கு பின் அவர் விடுதலை ஆவதாக இருந்த நிலையில் உரிய காரணமின்றி அவரை விடுதலை செய்யாமல் மேலும் பொய்யான வழக்குகள் பதிந்து சிறையில் அடைத்தனர்.
திரிபுராவைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் முயற்சியால் அம்மாநில அரசு மூலம் ஷாஜஹானின் குடும்பத்தினர் வங்கதேச அரசு நிர்வாகத்துடன் கடந்த 2000ம் ஆண்டு முதல் மேற்கொண்ட கடும் முயற்சி காரணமாக ஷாஜஹான் மையா விடுதலை செய்யப்பட்டார்.
இதன் மூலம் 36 ஆண்டுகள் சிறைவாசம் முடித்து சொந்த மாநிலம் திரும்பினார். அவரை உறவினர்கள் மாலை அணிவித்து வரவேற்றனர்.
இது குறித்து ஷாஜஹான் மையா கூறுகையில், மறுபிறவி எடுத்துள்ளேன். இந்தியா திரும்புவேன் என கனவிலும் நினைக்கவி்லலை. பொய் வழக்குகளை பதிந்து என்னை சிறையில் பல வகையில் சித்திரவதை செய்தனர். சிறையிலிருந்து என்னை விடுதலை செய்ய உதவிய அனைவருக்கும் நன்றி என்றார்.