தொடர் கன மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக 100க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாலும், ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாலும் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் பெய்து வரும் தொடர் கன மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக அங்கு 100க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாலும், ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாலும் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
உலகின் பல பகுதிகளிலும் கடுமையான வறட்சியும், மிக அதிக அளவு கனமழையும் பெய்து இயற்கை சமநிலை பாதிப்படைகிறது. இதனால் உலக நாடுகள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவிலும் தற்போது மிக கனமழை பொழிந்து அந்நாட்டின் இயல்பு நிலையை பாதிப்புக்குள்ளாக்கி வருகிறது. ஆஸ்திரேலியாவில் புயலுடன் கூடிய தொடர் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கடந்த சில நாட்களுக்கு முன் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என அனைத்தும் முற்றிலுமாக மூழ்கியுள்ளன.
மேலும் மோசமான வானிலை காரணமாக சிட்னி விமான நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதேபோல் ரெட்பெர்ன் ரயில் நிலையத்தில் சிக்னல் இயந்திரங்கள் பல்வேறு உபகரணங்கள் சேதமடைந்தன. பல கிலோ மீட்டர் தூரங்களுக்கு ரயில்வே பாதைகள் நீரால் சூழப்பட்டுள்ளன. எனவே அங்கு ரயில் சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன.
மழை மேலும் சில நாட்களுக்கு தொடரும் என்று கூறப்பட்டிருப்பதால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகி பெரும் அவதி அடைந்துள்ளனர். அதுமட்டும் இல்லாமல் தங்கள் அவசர மற்றும் திட்டமிட்ட பயணங்களுக்கு வெளியூர்கள் செல்ல முடியாமல் ரயில் மற்றும் விமான பயணிகள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.