துறையூர் பகுதியில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க நடவடிக்கை: பச்சமலையில் முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கப்படும்.
துறையூர் பகுதியில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க நடவடிக்கை: பச்சமலையில் முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கப்படும்.
திமுக வேட்பாளர் அருண் நேரு உறுதி.
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றிய பகுதியான பச்சமலையில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பச்சை மலையில் முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு பச்சமலை டாப் – செங்காட்டுப்பட்டியில் வாக்கு சேகரிப்பின் போது பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-
தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பு ஏற்ற தினத்திலிருந்து துறையூர் தொகுதிக்கு ஏராளமான நல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது .துறையூர் நகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பொருட்டு துறையூர் – ஆத்தூர் புறவழிச்சாலை திட்டம் -2 சுமார் 48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் துறையூர் பகுதிக்கு 108 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தனி கூட்டு குடிநீர் திட்டம் இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.
அடிவாரம் மற்றும் நாகலாபுரம் பகுதியில் தொழில் செய்து வரும் சிற்ப கலைஞர்களுக்கான தனி இடம் ஒதுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். துறையூர் தொகுதியில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர்கள் கலை மற்றும் அறிவியல் துறை படிப்புகளை படிப்பதற்கு தற்சமயம் திருச்சி, முசிறி, பெரம்பலூர் உள்ளிட்ட கல்லூரிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த சிரமத்தினை தவிர்க்கும் பொருட்டு துறையூர் பகுதியில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். துறையூர் தொகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கிட சிப்காட் தொழில் பேட்டை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பச்சமலை பகுதியில் முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கப்படும், மரவள்ளிக்கிழங்கு பதப்படுத்தும் கிடங்கு அமைக்கப்படுவதுடன் கொள்முதல் நிலையமும் அமைக்கப்படும். சாலை வசதி மோசம் அடைந்ததை தொடர்ந்து அவற்றை சரி செய்து போடப்பட்டு வருகிறது. கோம்பை வண்ணாடு ஊராட்சிகளுக்கு மருத்துவ வசதி கிடைத்திட புதிய மருத்துவமனை கொண்டுவர உரிய நடவடிக்கை எடுப்போம்.
மேலும் உப்பிலியபுரம் பகுதியில் உள்ள மக்களுக்காக புளியஞ்சோலையில் கிணறு வெட்டி தண்ணீர் இல்லாத கிராமப் பகுதிக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்திட திமுகவை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யுங்கள். இவ்வாறு திமுக வேட்பாளர் அருண் நேரு பேசினார்.
பச்சமலை டாப்- செங்காட்டுப்பட்டியில் பிரச்சாரத்தை துவக்கிய அருண் நேரு தொடர்ந்து தண்ணீர் பள்ளம், புத்தூர், நச்சினிப்பட்டி, த. மங்கபட்டி த. பாதர்பேட்டை, த. முருங்கப்பட்டி, கொப்பம்பட்டி, கோட்டப்பாளையம், பி. மேட்டூர் உள்ளிட்ட உப்பிலியபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 24 கிராமங்களில் வாக்குகள் சேகரித்தார்.
பிரச்சாரத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின் குமார், மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன், மாவட்ட அரசு ஆதிதிராவிடர் குழு தலைவர் மகாலிங்கம், உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர்கள் முத்துச்செல்வன், அசோகன், திருச்சி வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் கனகராஜ்,, விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ்குமார் பேரூர் கழகச் செயலாளர்கள் நடராஜன், வெள்ளையன் நகர்மன்ற தலைவர் செல்வராஜ் அண்ணன் நகர துணை செயலாளர் இளங்கோவன் மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு வாக்குகள் சேகரித்தனர். இதைத்தொடர்ந்து பச்சமலையில் உள்ள தண்ணீர் பள்ளம், புதூர், நச்சிலப்பட்டி உள்ளிட்ட மலை கிராமங்களில் மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
அப்போது திமுக வேட்பாளர் அருண் நேருவுக்கு மலைவாழ் பெண்கள் சிறப்பாக வரவேற்று ஆரத்தி எடுத்து ஆதரவு தெரிவித்தனர்.