ஓடும் பஸ்சில் மயங்கி கிடந்த முதியவரை காப்பாற்றிய நர்ஸ் வாழ்த்துக்கள்.
ஓடும் பஸ்சில் மயங்கி கிடந்த முதியவரை காப்பாற்றிய நர்ஸ்
வாழ்த்துக்கள்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் மைக்கேல், 72. இவர், நேற்று முன்தினம் காலை மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டிலிருந்து முதுகுளத்துார் செல்வதற்காக பரமக்குடி அரசு பஸ்சில் ஏறினார்.
பஸ் புறப்படுவதற்கு முன், அருகில் அமர்ந்திருந்த நபர், மைக்கேலுக்கு டீ வாங்கி கொடுத்தார். அதில் மயக்க மருந்து கலந்திருந்ததால், குடித்ததும் மைக்கேல் மயங்கினார்.
அவர் அணிந்திருந்த மோதிரம், கடிகாரத்தை பறித்த மர்ம நபர், கண்டக்டரிடம், ‘இவர் என் தந்தை; பரமக்குடியில் அவரை இறக்கி விடுங்கள்’ என்று கூறி, இறங்கி சென்று விட்டார்.
மயங்கிய நிலையில் இருந்த அந்த முதியவர் வாந்தி எடுத்த போது, போதையில் தான் வாந்தி எடுக்கிறார் என அருகில் இருந்தவர்கள் கருதினர். பஸ் மானாமதுரை வந்தது.
அங்கு ஏறிய, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பணிபுரியும் நர்ஸ் விசாலாட்சி என்பவர், முதியவர் போதையில் இல்லை என்பதை அறிந்து, உடனடியாக பஸ்சை ராமநாதபுரம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்குள் விடுமாறு டிரைவரை கேட்டுக் கொண்டார்.
அதன்படி பஸ்சை மருத்துவமனைக்கு டிரைவர் ஓட்டிச் சென்றார். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். பின், சுய நினைவிற்கு வந்த மைக்கேல், மயக்க மருந்து கொடுத்து ஏமாற்றப்பட்டதையும், மோதிரம், கடிகாரத்தை மர்ம நபர் பறித்து சென்றதையும் தெரிவித்தார்.
நர்ஸ் விசாலாட்சியின் சமயோஜிதத்தால் காப்பாற்றப்பட்ட அவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.