அருண் நேருவா, பாரிவேந்தரா..? பலம் காட்டும் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி கள நிலவரம்…!
அருண் நேருவா, பாரிவேந்தரா..? பலம் காட்டும் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி கள நிலவரம்…!
சிட்டிங் எம்.பியாக உள்ள இந்திய ஜனநாயக கட்சி பாரிவேந்தரே மீண்டும் பாஜக சார்பாக களத்தில் உள்ளார். பலகோடி பணத்தை இறைத்து எப்படியும் வென்று விடலாம் என்று நினைக்கும் பாரிவேந்தரின் கனவில் மண்ணை அள்ளி போட்டு விடுவார்கள் போல ஐ.ஜே.கே நிர்வாகிகள். பாரிவேந்தருக்கு வயதாயிடுச்சு இந்த தடவையோடு சரி அடுத்த முறை எல்லாம் தேர்தலில் நிற்க மாட்டார். அதனால் கிடைத்தவரை லாபம் என்று சில நிர்வாகிகளே பரிவேந்தர் கொடுத்த பணத்தை சுருட்ட ஆரம்பித்து விட்டார்களாம். இப்போது இந்த பணத்தை யார் அதிக அளவில் சுருட்டுவது என்று போட்டியே ஆரம்பமாகி விட்டதாம். இதனால் ஒன்றாக இருந்த ஐ.ஜே.கட்சி நிர்வாகிகள் மூன்று பிரிவாக பிரிந்து விட்டதாக சொல்கிறார்கள்.
அதேபோல் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒவ்வொரு பொறுப்பாளரை பாரிவேந்தர் நியமனம் செய்துள்ளாராம். அவர்கள் மூலமாகத்தான் பணப்பட்டுவாடா பணிகள் அந்தந்த தொகுதிக்குள் நடை பெறுகிறதாம். அந்த பொறுப்பாளர்களிடம் தான் கூட்டணி கட்சியான பாஜக, அமமுக, ஒ.பிஸ் அணி, ஜான்பாண்டியன் அணி நிர்வாகிகள் எதுவாக என்றாலும் சென்று கேட்க வேண்டுமாம். இதில் சில பொறுப்பாளர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகளை மதிப்பதேயில்லை என்பதால் பாஜக, அமமுக, ஜான் பாண்டியன் அணி நிர்வாகிகள் எல்லாம் பக்கத்து தொகுதி வேட்பாளர் கார்த்தியாயினிக்கு வேலை செய்ய விட்டார்களாம். இந்த விவகாரத்தை பாரிவேந்தர் கவனத்திற்கு சிலர் கொண்டு சென்றும் அவர் கண்டு கொள்ளாமல் இருக்கிறாராம்.
ஏற்கனவே தனித்து நின்று ஒரு லட்சம் வாக்குகள் வாங்கியதால் இந்த முறை கூடுதலாக வாக்குகளை வாங்கினாலே ஜெயித்து விடலாம் என்ற நம்பிக்கையில் பொறுப்பாளர்களை நம்பியும், தன் சமூக உடையார் வாக்குகளை நம்பியும் களத்தில் இறங்கி வேலை செய்து வருகிறார் பாரிவேந்தர். தான் எம்.பியாக இருந்த போது செய்த சாதனைகளையும் சொல்லி பட்டியலிட்டு வாக்கு சேகரித்து வருகிறார்.
அதேபோல் முன்னாள் எம்.எல்.ஏவும் தற்போது அமமுகவில் உள்ள ராஜசேகரன் அமைச்சர் நேருவால் முத்தரையர், முக்குலோத்தர் மற்றும் தலித் சமுதாய திமுக முக்கிய பிரமுகர்கள் எல்லாம் எப்படி ஓரங்கட்டபட்டார்கள் என்றும், இப்போது அவருடைய ஜாதியை சேர்ந்தவர்கள் தான் அதிகமாக முக்கிய பொறுப்பில் உள்ளார்கள் என்று அமைச்சர் நேருவின் ஜாதி வெறி அரசியலை பட்டியலிட்டு பேட்டி கொடுத்தார். இதன் பின்னணியில் பாரிவேந்தர் இருப்பதாக சொல்லப்பட்டாலும் ராஜசேகரனின் தேர்தல் ஸ்டண்ட் எடுபடாமல் போனது. காரணம் அமைச்சர் நேரு எல்லா சமூகத்தினரையும் அரவணைத்து செல்வது தான்,
திமுகவிலும் அமைச்சர் நேருவின் மகன் அருண் நேருவும் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரித்து வருகிறார். எல்லோருக்கும் வாரிசு அரசியல் என்பது பொருந்தும். என்னுடைய செயல்பாட்டை பாருங்கள். இன்னார் மகன் செய்வார்…செய்யமுடியாது என்ற வரையறை எல்லாம் கிடையாது. தொகுதி மக்களுக்கு என்ன வேண்டும் என்ற நோக்கிலேயே நாங்கள் செயல்பட்டு வருகிறோம். களத்தில் இறங்கி வேலை செய்யும் தொண்டர்களும் நானும் ஒன்றுதான். வேட்பாளர் தொண்டர் என்ற வித்தியாசம் கிடையாது. என்று டச்சிங்காக பேசி வாக்கு சேகரிப்பதை மக்கள் காது கொடுத்து கேட்கிறார்கள். அருண் நேரு செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டத்தை காண முடிகிறது.
அதிமுகவில் முக்கிய புள்ளிகள் எல்லாம் அய்யோ பெரம்பலூரா எங்களுக்கு வேண்டாம் என்று ஒதுங்கிவிட, எனக்கு சீட் கொடுங்கள் எவ்வளவு செலவானாலும் ஜெயித்து காண்பிக்கிறேன் என்று வான்டடாக எடப்பாடியிடம் சொல்ல அவரும் சம்மதித்து விட்டார். எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளராக இருக்கும் சந்திரமோகன் முன்னாள் திமுக அமைச்சர் செல்வராஜின் தம்பி மகன் என்பது குறிப்பிடதக்கது. திமுக மற்றும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை பார்த்து ஏமாந்து விடாதீர்கள். அவர்கள் மக்கள் பிரச்சனைகளில் அக்கறை காட்டாமல் அரசியல் மட்டுமே செய்து கொண்டிருக்கிறார்கள், ஆனால் அதிமுகவினர் வாக்களிக்கும் மக்களுக்கு விசுவாசமாக இருப்பார்கள். எனக்கு ஒரு வாய்ப்பு தந்தால் இந்த தொகுதியை முன் மாதிரி தொகுதியாக மாற்றி காட்டி விசுவாக இருந்து மக்கள் பணியாற்றுவேன் என்று சந்திரமோகன் போகும் இடங்களில் எல்லாம் பேசும் பேச்சை மக்கள் ரசிக்காமல் இல்லை.
நாம் தமிழர் கட்சி வேட்பாளராக களத்தில் நிறபவர் தேன்மொழி. இவர் தஞ்சை மாவட்டம் திருவையாறு சட்டமன்ற தொகுதியை சேர்ந்தவர். பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் ஒரே பெண் வேட்பாளர் இவர் தான். திமுக திட்டங்களை வைத்தே திமுகவையே ஆதாரபூர்வமாக விமர்சனம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார். மைக் சின்னத்தில் போட்டியிடும் இவருக்கும் பல கிராமங்களில் ஆண்களும் பெண்களும் சிறப்பான வரவேற்ப்பு கொடுத்து அசத்துகிறார்கள்.
அதேபோல் தொட்டியம், லால்குடி, பெரம்பலூர், துறையூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள சில அதிமுக முக்கிய பிரமுகர்கள் எதிரணியினருக்கு விலை போய் விட்டதால், அதிமுக வேட்பாளர் பிரச்சாரத்தில் கலந்து கொள்வது போல் நடித்து, விலை போன எதிரணியினருக்கு ரகசிய தகவல்களை அடிக்கடி பாஸ் பண்ணுவதாக இறுதிக்கட்ட தகவல். இதனால் அதிமுக வேட்பாளர் மூன்றாம் இடத்திற்கு போனாலும் ஆச்சர்யம் இல்லை.
பெரம்பலூர் தொகுதியில் நான்கு முனை போட்டி நிலவினாலும், பாரிவேந்தரின் வாக்கு பிரிப்பு, திமுக எம்.எல்.ஏக்கள் காடுவெட்டி தியாகராஜன், ஸ்டாலின் குமார், கதிரவன் ஆகியோரின் செயல்பாடுகளில் மக்களின் அதிருப்தி என்று பல குற்றசாட்டுகள் திமுக மீது இருந்தாலும். பாரிவேந்தர் மற்றும் அருண் நேருவின் கடைசி நேர பண பட்டுவாடாவில். குறைந்த அளவு வாக்குகள் வித்தியாசத்திலாவது அருண் நேரு வாகை சூடுவார் என்பதே கள நிலவரம்.