இயக்குநராக மாறிய தயாரிப்பாளர் ஜேஎஸ்கே: “ஃபயர் படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்”
இயக்குநராக மாறிய தயாரிப்பாளர் ஜேஎஸ்கே: “ஃபயர் படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்”
பல்வேறு வெற்றி படங்களின் விநியோகஸ்தராக தடம் பதித்து, தேசிய விருது பெற்ற மற்றும் சூப்பர் ஹிட் திரைப்படங்களின் தயாரிப்பாளராக உயர்ந்து, ‘அநீதி’, ‘வாழை’, உள்ளிட்ட படங்களில் நடிகராகவும் முத்திரை பதித்துள்ள ஜேஎஸ்கே இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள ‘ஃபயர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான், சாந்தினி தமிழரசன், சிங்கம் புலி, சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பத்மன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமிழகத்தையே உலுக்கிய ஓர் உண்மைச் சம்பவத்தால் உந்தப்பட்ட விறுவிறுப்பான திரில்லராக உருவாகியுள்ளது.
இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர் வி உதயகுமார், “தயாரிப்பாளராக இருந்து இயக்குநராக ஆகியுள்ள ஜே எஸ் கே-க்கு இயக்குநர்கள் சங்கத்தின் சார்பாக வாழ்த்துகள். ஃபயர் படத்தின் முன்னோட்டம் பெயருக்கேற்றாற்போல ஃபயர் ஆக உள்ளது. அடுத்தது என்ன என்று ஆவலை தூண்டுகிறது. தேசிய விருதுகள் வென்ற படங்களின் தயாரிப்பாளர் இயக்கியுள்ள முதல் படமும் தேசிய விருதுபெறும் என நம்புகிறேன்” என்றார்.
நடிகை சாக்ஷி அகர்வால், ” இந்த படம் ஒரு துணிச்சலான முயற்சி. இன்றைய சமுதாயத்திற்கு மிகவும் அவசியமான கருத்தை இது சொல்கிறது. அதே சமயம் இளைஞர்கள் ரசிக்கும் வகையில் இப்படம் அமைந்துள்ளது இந்த கருவை கையில் எடுத்ததற்காக ஜே எஸ் கே அவர்களுக்கு நன்றி” என்றார்.
நடிகர்-இயக்குநர் பாண்டியராஜன், ” ஜே எஸ் கே எப்போதும் ஆச்சரியப் படுத்திக்கொண்டே இருப்பார். சினிமாவில் அவர் தொடாத இடமே இல்லை. திரைப்படங்களை விநியோகித்தார், தயாரித்தார். பின்னர் நடிக்க ஆரம்பித்தார், இப்போது இயக்குநராக உருவெடுத்துள்ளார். அவரது இந்த புதிய முயற்சி மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்” என்று வாழ்த்தினார்.
ஃபயர் திரைப்படத்தின் இயக்குநர் ஜேஎஸ்கே, “இந்த படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். இப்படம் உருவாக தங்கள் சிறப்பான பங்களிப்பை அளித்த எங்கள் குழுவினர் ஒவ்வொருவருக்கும் நன்றி. பொதுவாக திரைப்பட நிகழ்ச்சிகளில் உதவி இயக்குநர்களுக்கு பேச வாய்ப்பு கிடைக்காது. ஆகையால் எனது உதவி இயக்குநர்களை ஒரு சில வார்த்தைகள் பேச அன்புடன் மேடைக்கு அழைக்கிறேன். இந்த படத்தை இதுவரை பார்த்த அனைவரும் பெரிதும் பாராட்டி உள்ளனர். ஃபயர் அனைவருக்கும் புடிக்கும்” என்றார்.