ஸ்ரீரங்கத்தில் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமிக்க முயற்சி பொதுமக்கள் எதிர்ப்பு.
ஸ்ரீரங்கத்தில் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமிக்க முயற்சி பொதுமக்கள் எதிர்ப்பு.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் அருகே உள்ளது புலிமண்டபம். இந்த புலிமண்டபம் ரெங்கபவன் எதிரே மண்ணச்சநல்லூர் வணிக வைசிய சங்கம் உள்ளது. இது மாநகராட்சி இடம் என்று சொல்லப்படுகிறது. வருடத்துக்கு ஒரு முறை ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவில் யானை வாகனத்தில் புறப்பாடு இங்கே நடத்தப்படும். மற்றபடி இந்த சங்கம் பூட்டியே தான் கிடக்கும்.
இதன் அருகில் நீண்ட காலமாக அரசு பள்ளி ஒன்று செயல்படுகிறது. அவர்கள் அந்த இடத்தை விளையாட்டு மைதானமாக பயன்படுத்த இருந்தனர். இந்த நிலையில் மாநகராட்சிக்கு சொந்தமான அந்த காலி இடத்தை உள்ளூர் ஆளும் கட்சி பகுதி பிரமுகர் ஒருவருடன் அந்த சங்க அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்ய தடுப்புச் சுவர் எழுப்பிக் கொண்டிருந்தனர். அதனை தடுத்து நிறுத்திய அந்த பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.
பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வேலையும் நிறுத்தப்பட்டது. பின்னர் வந்த மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு செய்பவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டு இது மாநகராட்சிக்கு சொந்தமானது என்று சொல்ல, அதற்கு ஆக்கிரமிப்பாளர்கள் எங்களிடமும் ஆவணங்கள் இருக்கிறது என்று வாதம் செய்தனர். இந்த நிலையில் போலிஸார் வர ஆக்கிரமிப்பாளர்களை காவல் நிலையத்துக்கு வர சொல்லி பொதுமக்களை கலைத்தனர்.
ஆக்கிரமிப்பாளர்களோ இது எங்கள் மூதாதையர்கள் இடம். இது சம்பந்தமான ஆவணங்களை நாங்கள் அமைச்சர் ஆபிசில் கொடுத்து விட்டோம். சரியான ஆவணங்கள் இருந்தால் சட்டப்படி நடவடிக்கைக்கும் உடன்படுகிறோம். நாங்கள் ஆக்கிரமிக்கவில்லை என்று ஏதேதோ பேசியவாறே சென்றனர். அந்த இடத்தின் மதிப்பு பலகோடி இருக்கும் என்பதால் இதை வளைத்து போட சிலர் முயற்சி செய்கின்றனர். அதிகாரிகள் உடந்தை இல்லாமல் ஆக்கிரமிப்பாளர்கள் வேலை செய்வார்களா என்று பொதுமக்கள் பேசியதையும் கேட்க முடிந்தது.