ராமநாதபுரம் மாவட்டம் வலசைக்கு வந்த அரியவகை பறவைகள்.
ராமநாதபுரம் மாவட்டம் வலசைக்கு வந்த அரியவகை பறவைகள்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வனத்துறை சார்பில் இரண்டாம் கட்டமாக மார்ச் 2, 3ல் நில வாழ் பறவைகள் கணக்கெடுப்பு 29 இடங்களில் நடந்தது.
12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வலசை வந்திருப்பதாக பறவைகள் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். பறவைகள் ஆர்வலர் ரவீந்திரன் தெரிவித்ததாவது: இவ்வாண்டு வடகிழக்கு பருவமழை அதிகளவில் பெய்தது. இதன் காரணமாக அதிகளவில் பறவைகள் வரத்து இருந்தது. கிழக்கு கடற்கரை, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இருந்து பறவைகள் வலசை அக்டோபர் முதல் நவம்பர் வரை இருக்கும். மத்திய காலங்களான டிச.,15 முதல் பிப்ரவரி வரை வலசை இருக்கும்.
வலசை திரும்புதல் பிப்ரவரி இறுதி வாரம் முதல் ஏப்ரல் இறுதி வாரம் வரை இருக்கும்.ஈரோடு போன்ற பகுதிகளில் தென் மேற்கு பருவமழை தாமதம் காரணமாக ஒரு மாதம் தாமதமாகவே பறவைகள் வரத்து இருந்தது. வேட்டங்குடி சரணாலயத்தில் தான் முதன் முதலாக வலசை வரும் பறவைகள் கூடு கட்டும். கிழக்கு கடற்கரைப்பகுதியில் 4 ஆயிரம் பூநாரைகள் வரத்து இருந்தது. அரிய வகை பறவைகளான நண்டுண்ணி உல்லான், கிளிஞ்சல் பிடிப்பான் அதிகம் வந்துள்ளன.ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 150 வகையான பறவைகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
மாதம் தோறும் வனத்துறை பணியாளர்கள் பறவையினங்கள், பட்டாம்பூச்சிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்போது தான் அவற்றின் வருகை, செயல்பாடுகள் நமக்கு தெரியவரும். பொதுவாக மனிதர்கள் இயற்கையில் இருந்து விலகி வந்துவிட்டனர். பறவையினங்கள் இயற்கையுடன் வாழப்பழகிவிட்டன. பருவகாலங்கள் துவங்குவதை 45 நாட்களுக்கு முன்பாக பறவையினங்கள் வரத்தை வைத்து கண்டு பிடிக்க முடியும் என்றார்.