தமிழ்நாடு நகை அடகு பிடிப்போர்கள் கூட்டமைப்பு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை.
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை உரிமம் புதுப்பிக்க நடைமுறை: நகை அடகு கடை உரிமையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்
தமிழ்நாடு நகை அடகு பிடிப்போர்கள் கூட்டமைப்பு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை.
தமிழ்நாடு நகை அடகு பிடிப்போர்கள் கூட்டமைப்பு சார்பில் தலைவர் எஸ்.கந்தன், செயல் தலைவர் எஸ்.ஆர்.வி.கண்ணன், பொருளாளர் என்.பி. ஸ்ரீராமகுமார்,பொதுச் செயலாளர் எஸ்.வி.அன்பழகன், கூடுதல் செயலாளர் எம்.துரைசாமி, மாநில இளைஞரணி தலைவர் ராஜ் விமல் ஆகியோர் சார்பில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரம ராஜா, மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு ஆகியோர் முன்னிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் பல வருடங்களாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் கடந்த சில மாதங்களாகவே காவல் துறையினர் எங்களிடம் அடிக்கடி வந்து உங்களிடத்தில் திருட்டுப் போன நகைகள் உள்ளது என்று கூறி எங்களை கைது செய்து, கைது ஆணை இல்லாமலும், போதுமான ஆதாரங்கள் இல்லாமலும், காவல் நிலையத்திற்கு எங்களை அழைத்து செல்கின்றனர். கைது செய்யும் நேரங்களில் எங்களது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிப்பதற்கான வாய்ப்பும் அளிக்கப்படவில்லை.
போதுமான ஆதாரங்களும், காரணங்களும் இல்லாமல் எங்களை கைது செய்வதற்கு காவல் துறையினருக்கு அதிகாரம் இல்லை. தமிழ்நாடு அடகு கடை தரகர்கள் சட்டம் 2011-ன் கீழ் நாங்கள் கடையை நடத்துவது குறித்ததான அனைத்து நடவடிக்கைகளையும் சரியாக பின்பற்றி வருகிறோம்.
இதனால் நாங்கள் மனரீதியாகவும், தொழில்ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறோம். இதனால் எங்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையிலும், காவல்துறையினரின் இதுபோன்ற சட்டவிரோதமான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையிலும் சட்ட திருத்தத்தை கொண்டு வர வேண்டும். எங்களுக்கும், எங்களுடைய கடைகளுக்கும் உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
கடை உரிமம் புதுப்பித்தலை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை என வழிவகுக்கவேண்டும்.
கடை உரிமம் புதுப்பிக்கப்படும்
போது காவல்துறை விசாரணையை நீக்கவேண்டும்.
கடை உரிமையாளர் இறக்கும் பட்சத்தில் அந்த கடையை அவரால் நியமனம் செய்யப்பட்ட வாரிசுதாரர் தொடர்ந்து நடத்திவர ஆன்லைன் மூலம் அனுமதி வழங்கப்படவேண்டும். காலம் கடந்து மீட்கப்படாமல் இருக்ககும் நகைகளை ஏலம் விடுவதற்கு அனுமதிப்பது, காலம் நிர்ணயம் செய்து உடனடியாக ஏலம் விடுவதற்கு அனுமதி வழங்கப்படவேண்டும். முதல் தகவல் அறிக்கை மூலம் குற்ற வழக்கு பதிவு செய்த பின்பே நகைக்கடை உரிமையாளரை விசாரனைக்கு உட்படுத்த வழிவகை செய்வதும்.
கடையின் விலாசம் மாற்றம் செய்யும் போது ஆன்லைன் மூலம் உடனடியாக பதிவு விலாசத்தை மாற்றம் செய்து தர ஆவணம் செய்ய வேண்டும்.
எனவே தமிழ்நாடு முதலமைச்சர் எங்கள் சங்கத்தில் உள்ள எங்கள் அனைவருக்கும், நாங்கள் நடத்தி வரும் கடைகளுக்கும் எந்தவிதமான தொந்தரவுகளோ, பிரச்சனைகளோ காவல்துறையினரால் ஏற்படாதபடி உரிய பாதுகாப்பு அளிக்கவும், நாங்கள் தொடர்ந்து எங்களுடைய கடைகளை நடத்தி வருவதற்கு வழிவகை செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.