பட்டாசு ஆலை விபத்து பத்து பேர் பலி. ஒருவர் கைது. இருவரை தேடி வருகின்றனர்.
பட்டாசு ஆலை விபத்து பத்து பேர் பலி. ஒருவர் கைது. இருவரை தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் சனிக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். நான்கு பேர் பலத்த காயமடைந்தனர்.
சாத்தூரை அடுத்த வெம்பக்கோட்டை அருகேயுள்ள ராமுத்தேவன்பட்டியில் சிவகாசியைச் சேர்ந்த விக்னேஷ் (45) என்பவர் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். உரிமம் பெற்று நடத்தப்பட்ட இந்த ஆலையில் 55 அறைகளில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.
சனிக்கிழமை தொழிலாளர்கள் வழக்கம்போல பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். நண்பகல் 12 மணியளவில் ஓர் அறையில் பட்டாசு தயாரிக்கத் தேவையான மருந்துக் கலவையில் உராய்வு காரணமாக தீப்பிடித்து வெடி விபத்து ஏற்பட்டது. அந்த அறையில் பற்றிய தீ அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியது. இந்த விபத்தில் 5 அறைகள் இடிந்து தரைமட்டமாகின. தொழிலாளர்கள் பலர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
வெம்பக்கோட்டை, ஏழாயிரம்பண்ணை, சிவகாசி பகுதிகளிலிருந்து வந்த தீயணைப்பு, மீட்புப் படையினர் தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தி, இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்களை மீட்டனர்.
இந்த விபத்தில் அச்சம்தவிர்த்தான் திருவேங்கடபுரம் குடியிருப்பைச் சேர்ந்த கருப்பன் மகன் ஒளவைராஜ் (62), கீழாண்மறைநாடு சமத்துவபுரத்தைச் சேர்ந்த முனியசாமி மகன் முத்து (50), முருகன் மகன் குருசாமி (50), முனியாண்டி மகன் முனியசாமி (44), கிளியம்பட்டைச் சேர்ந்த சுப்புராஜ் மகன் ரமேஷ்பாண்டி (26), ஹரிச்சந்திரன் மகன் கருப்பசாமி (29), ராமுத்தேவன்பட்டியைச் சேர்ந்த தங்கமணி மனைவி முருகஜோதி (50), வெம்பக்கோட்டை நேரு குடியிருப்பைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மனைவி சாந்தா (42), டி.மேட்டூர் பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி அம்பிகா (29), ஆலங்குளம் முக்குசாலைப் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் மனைவி ஜெயா (58) ஆகிய 10 பேரும் உடல் கருகி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
ராமுதேவன்பட்டி சிவக்குமார் (29), முத்துக்குமார் (22), விஜயலட்சுமி (30), ரங்கம்மாள் ஆகிய நால்வரும் பலத்த காயமடைந்தனர். விஜயலட்சுமி கல்லமநாயக்கன்பட்டி அரசு மருத்துவமனையிலும், சிவக்குமார், முத்துக்குமார் ஆகிய இருவரும் தீவிர சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையிலும், ரங்கம்மாள் சிவகாசி அரசு மருத்துவமனையிலும்
அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஃபோர்மேன் சுரேஷ் குமாரை கைது செய்து காவல் துறையினர் மேலும் மேலாளர் மற்றும் உரிமையாளரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.