தங்கர்பச்சனா, விஷ்ணு பிரசாத்தா கடலூர் நாடாளுமன்ற தொகுதி களநிலவரம்.
தங்கர்பச்சனா, விஷ்ணு பிரசாத்தா கடலூர் நாடாளுமன்ற தொகுதி களநிலவரம்.
கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, விருதாச்சலம், திட்டக்குடி ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கியது தான் கடலூர் மக்களவைத் தொகுதி.
இந்த தொகுதியில் தமிழகத்தில் இரண்டாவது மிகப்பெரிய வெள்ளி கடற்கரையும், வடலூர் சத்திய ஞான சபை, திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயில், பாடலீஸ்வரர் கோயில், விருத்தகிரீஸ்வரர் கோயில், வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளிட்ட ஆன்மீக வழி பாட்டுத்தலங்கள் உள்ளன. ஆங்கிலேயர் ஆட்சி செய்தபோது அவர்கள் கட்டிய புனித டேவிட் கோட்டையும் இங்கு தான் உள்ளது.
பலாப்பழத்திற்கு புகழ்பெற்ற பண்ருட்டி நகரமும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமும் இங்குதான் உள்ளது. அதுமட்டுமில்லாமல் விருதாச்சலம் பீங்கான் தொழிற்சாலை, கடலூர் சிப்காட், நெல்லிக்குப்பம் இஐடி பாரி தனியார் சர்க்கரை ஆலை, முந்திரி ஏற்றுமதி உள்ளிட்ட தொழில்கள் நடைபெறுகின்றன. விவசாயத் தொழிலாளர்கள் அதிகம் உள்ள இந்த தொகுதியில் நெல், கரும்பு, முந்திரி, மிளகாய், சாமந்தி, பலா உள்ளிட்டவைகள் அதிக அளவில் பயிரிட்டு வருகின்றனர்.*
அதிமுகவும், திமுகவும் கடலூரில் சமபலத்துடன் உள்ளனர். கடலூரை பொருத்தமட்டில் வன்னிய சமூகத்தினரும் தலித் சமூகத்தினரும் சம அளவில் உள்ளனர். அதுமட்டுமில்லாமல் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், முதலியார், யாதவர், செட்டியார், பிள்ளைமார்கள், ரெட்டியார் உள்ளிட்டோர் கணிசமான அளவில் உள்ளனர்.
கடலூர் காங்கிரஸின் கோட்டை என்று சொல்லப்படுகிறது. இதுவரை நடந்த மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் 8 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக 5 முறையும், அதிமுக 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது. தற்போதைய 2024 தேர்தலில் காங்கிரஸில் விஷ்ணுபிரசாத், பாமகவில் இயக்குநர் தங்கர்பச்சான், தேமுதிகவில் சிவக்கொழுந்து ஆகியோர் போட்டியில் உள்ளனர்.
காங்கிரஸ் வேட்பாளரான விஷ்னு பிரசாத் ஆரணி தொகுதியின் சிட்டிங் எம்.பி. ஆவார். இவரது தந்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் எம்.கிருஷ்ணசாமி. காங்கிரஸ் கட்சியின் கடந்த கால வெற்றிகள், திமுக கூட்டணி, சமூக வாக்குகள் ஆகியவை காங்கிரஸ் வேட்பாளருக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.
அதேபோல் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. வேட்பாளராக சிவக்கொழுந்து போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினராக கடந்த 2011-ம் ஆண்டு இருந்தார். 2021-ம் ஆண்டு இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். தற்போது மீண்டும் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மாவட்ட செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க. வேட்பாளராக தங்கர்பச்சான் போட்டியிடுகிறார். நடிகா், இயக்குனர், ஒளிப்பதிவாளர் என பன்முக திறமை கொண்ட இவர் சினிமா துறையில் இருந்து அரசியலுக்கு வந்துள்ளார். அரசியல் புதிது என்றாலும் அது சார்ந்த படைப்புகளை படைத்துள்ளார். மேலும் தன்னுடைய அனுபவம், பா.ம.க, பாஜக கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்போடு களம் காண்கிறார்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மணிவாசகன் போட்டியிடுகிறார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான இவர் அரசியலுக்கு வந்துள்ளார். இவர் தேர்தல் தேதி அறிவித்தது முதல் தனது தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார். இது தவிர பல்வேறு வேட்பாளர்களும் வெற்றியை நோக்கி பயணித்து வருகின்றனர்.
மேலும் இத்தொகுதியை பொறுத்தவரையில் கூட்டணி கட்சிகளின் பலம் தான் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கிறது என்பதே கடந்த கால வரலாறு. அதேவேளையில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் 41 ஆயிரத்து 673 வாக்காளர்கள் முதல் முறையாக வாக்களிக்க இருக்கிறார்கள். இவர்களும் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியில் ஒன்றாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
ஆனாலும் இறுதிக்கட்ட நிலவரப்படி இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெறும்.