திருப்பூரில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் 10வது மாநில பொதுக்குழு புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு.
திருப்பூரில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் 10வது மாநில பொதுக்குழு புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு.
எஸ்டிபிஐ கட்சியின் 10வது மாநில பொதுக்குழு நவம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் திருப்பூரில் நடைபெற்றது. நவ.23 அன்று காலை கட்சி கொடியேற்ற நிகழ்வுடன் பொதுக்குழு நிகழ்ச்சி தொடங்கியது.
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இப்பொதுக்குழுவில் கட்சியின் ஆண்டறிக்கை, நிதி அறிக்கை தாக்கல் மற்றும் அடுத்த மூன்றாண்டுக்கான புதிய மாநில நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மற்றும் தேசிய பொதுக் குழுவிற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஆகியன நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர்கள் அப்துல் மஜீத் பைஸி, இலியாஸ் தும்பே அகில இந்திய செயலாளர்கள் ரியாஸ் பாரங்கிபேட், அப்துல் சத்தார், அகில இந்திய செயற்குழு உறுப்பினர்கள் தெகலான் பாகவி, யாமுகைதீன், முகமது பாரூக் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில செயலாளர் ராஜா உசேன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி ஆண்டறிக்கையை தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து எஸ்டிபிஐ கட்சியின் அடுத்த மூன்றாண்டுக்கான புதிய மாநில நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலை கட்சியின் தேர்தல் அதிகாரியும் எஸ்டிபிஐ கட்சியின் தேசிய பொதுச்செயலாளருமான இலியாஸ் தும்பே தனது மேற்பார்வையில் நடத்தினார். துணை தேர்தல் அதிகாரியாக தேசிய செயலாளர் ரியாஸ் பாரங்கிபேட் செயல்பட்டார். நடைபெற்ற தேர்தலின் முடிவில் புதிய மாநில செயற்குழு உறுப்பினர்களும், தேசிய பொதுக்குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதையடுத்து புதிய மாநில நிர்வாகிகளுக்கான தேர்தலும் நடைபெற்றது.
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய மாநில நிர்வாகிகளை இன்று (நவ,24) நடைபெற்ற பொதுக்குழுவின் இரண்டாம் நாள் அமர்வில் காலை 11 மணியளவில் எஸ்டிபிஐ கட்சியின் தேசிய செயலாளர் ரியாஸ் பாரங்கிபேட் அறிவிப்பு செய்தார்.
அதன்படி எஸ்டிபிஐ கட்சியின் புதிய தமிழ் மாநில தலைவராக நெல்லை முபாரக், துணைத் தலைவர்களாக அப்துல் ஹமீது, அச உமர், பொதுச்செயலாளர்களாக நிஜாம் முகைதீன் (நிர்வாகம்), முகமது நஸ்ரூதீன் (அமைப்பு), அகமது நவவி, ஏ.கே.கரீம், அபுபக்கர் சித்திக், செயலாளர்களாக ஏ.எஸ்.ஷபீக் அஹம்மது, பாஸ்டர் வி.மார்க், நஜ்மா பேகம் ஹமீது ஃப்ரோஜ், அப்துல்லா ஹஸ்ஸான், பொருளாளராக முஸ்தபா கோவை ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மேலும், மாநில செயற்குழு உறுப்பினர்களாக அப்துல் ஹக்கீம், அமீர் ஹம்சா, பஷீர் சுல்தான், கேகேஎஸ்எம் தெகலான் பாகவி, பாத்திமா கனி, பையாஸ் அஹம்மது, முகம்மது ரஷீத், முஜிபுர் ரஹ்மான், வழ.ராஜா முஹம்மது, ரத்தினம், ஃபாயிஷா ஷஃபிகா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேசிய பொதுக்குழு உறுப்பினர்களாக எஸ்.எஸ்.ஏ.கனி, ரியாஸ் ராம்நாடு, சீமான் சிக்கந்தர், தப்ரே ஆலம், முகமது ரபீக், ஜூனைத் அன்சாரி, ராஜா உசேன், அம்ஜத் பாஷா, சலாஹூதீன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில நிர்வாகிகளை வாழ்த்தி தேசிய நிர்வாகிகள் உரையாற்றினர். தொடர்ந்து புதிய மாநில தலைவர் நெல்லை முபாரக் ஏற்புரையாற்றினார். புதிய மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் நன்றியுரையாற்றினார்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில், நீட் தேர்வு நிரந்தர விலக்கு விவகாரத்தில் தாமதமற்ற துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், மாநில கல்விக் கொள்கையை விரைவாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், பள்ளிக் கல்வித்துறையில் சமூகநீதி கொள்கைகளை உறுதி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், திருப்பூர் உள்ளிட்ட கோவை மண்டலத்தின் தொழில்துறையை மேம்படுத்தும் நடவடிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகள் துரிதமாக மேற்கொள்ள வேண்டும், காலி அரசுப் பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும், சிறப்புத் திட்டங்களுக்கான நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பல்கலை., துணைவேந்தர் உள்ளிட்ட முக்கிய அரசு அமைப்புகள், வாரியங்கள் மற்றும் ஆணையங்களில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கிட வேண்டும், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தனியார் வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கு 75% இடஒதுக்கீடு வழங்கிட வேண்டும், தமிழகத்தை குறிவைக்கும் நாசகார திட்டங்களை அனுமதிக்கக் கூடாது, இலங்கை கடற்படையின் அத்துமீறல் தாக்குதலிலிருந்து தமிழக மீனவர்களை பாதுகாக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும், பட்டியலினத்தவர்களுக்கு எதிரான சாதிய தாக்குதல்களை தடுத்திட வேண்டும், பூரண மதுவிலக்கை விரைவில் அமல்படுத்த வேண்டும், வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும், சட்டம்-ஒழுங்கும் காக்க உறுதியான நடவடிக்கைகள் மூலம் பெருகும் குற்றச் சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டும், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கைவிட வேண்டும், சச்சார் கமிட்டியை போன்று தமிழகத்தில் வாழும் முஸ்லிம்களின் வாழ்நிலைகள் குறித்து அறிய கமிட்டியை அமைக்க வேண்டும், தேர்தல் வாக்குறுதிபடி முஸ்லிம் ஆயுள் சிறைக்கைதிகளை விரைவாக அதிகாரப்பூர்வமாக விடுதலை செய்ய வேண்டும், சிறுபான்மையினர் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும், இஸ்லாமிய வெறுப்பை பரப்பும் திரைப்படங்கள், ஊடகங்களுக்கு தடை விதிக்க வேண்டும், போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும், சிறுபான்மை சமூக மக்களுக்காக தனி பட்ஜெட் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த பொதுக்குழு நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலிருந்தும் ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட எஸ்டிபிஐ கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்த பொதுக்குழு கூட்டத்திற்கான ஏற்பாட்டை கோவை மண்டல எஸ்டிபிஐ கட்சியினர் சிறப்பாக செய்திருந்தனர்.