கோத்தகிரி “லாங்வுட் சோலா”வில் கட்டப்படும் கட்டிடம். வன ஆர்வலர்கள் அதிர்ச்சி !
நீலகிரி மாவட்டத்தில் பருவ மழை தோறும் நிலச்சரிவிற்கு உள்ளாகும் கோத்தகிரிக்கு மிக அருகில் 116 ஹெக்டேர் பரப்பளவில் தேயிலைக்காடுகளுக்கு இடையே எஞ்சியிருக்கும் அடர் காட்டின் பெயர்
” லாங்வுட் சோலா “
காட்டுமாடுகள், மலைஅணில்கள் , கூரைப்பன்றிகள், மரநாய்கள் சீகாரப்பூங்குருவிகள் என, நகரமயமாகும் நீலகிரிகாடுகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட எண்ணற்ற உயிர்களின் கடைசிப்புகலிடமாக விளங்கும் லாங்வுட் சோலாவின் வரலாறு துயரங்களையும், நம்பிக்கைகளையும் தன்னகத்தே கொண்டது.
பெரும் பகுதி அழிக்கப்பட்டு …பிறகு இயற்கை செயற்பாட்டாளர்களின் அயராத முயற்சியில் மறுபடியும் உயிர்த்தெழுந்த ஓர் காட்டை காட்டுங்கள் என்றால் நமது சுட்டு விரல் லாங்வுட்சோலாவின் திசை நோக்கி நீளும்.
விலங்குகளுக்கு மட்டுமில்லாமல் கோத்தகிரியைச் சுற்றிலும் வசிக்கும் சுமார் பத்தாயிரத்திற்கும் மேலான மக்களின் நீராதாரமும் லாங்வுட் சோலாதான்! இயற்கையின் உயிர் மூச்சான இக்காட்டில் தனித்துவமான தாவரத்தொகுதிகளும் உள்ளன.
லாங்வுட் சோலாவின் வற்றாத. மூன்று நீரோடைகள்தான் எல்லாக்காலங்களிலும் உயிர்களுக்கு தாகம் தணிக்கின்றன.
முன்னமே லாங்வுட் சோலாவிலுள்ள ” சுற்று சூழல் விழிப்புணர்வு மையத்தை விரிவு படுத்தி சூழல் சுற்றுலா தளம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டு அதன் மேம்பாட்டுக்கான நிதியையும் அறிவித்துள்ளது. கோடிக்கணக்கில் நிதியாக வரும் பணத்தில் கையூட்டு பெறுவதற்கு ஒரே வழி கட்டுமான திட்டம் தான்! வெகு துரிதமாக தொடங்கும் கட்டுமானப்பணியினைப் பார்க்கையில் மக்களுக்கு மட்டுமில்லாமல் காட்டுயிர்களுக்கும் அச்சம் ஏற்படுகின்றன.
லாங்வுட் சோலாவில் இந்த மேம்பாட்டுத்திட்டம் நிறைவேறினால் இப்பகுதியில் வாழும் மக்களுக்கும் காட்டுயிர்களுக்கும் பாதிப்பு வரும் .அதன் பொருட்டே இயற்கையாளர்களும் இந்த திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார்கள்! திட்டத்தை உடனே கைவிடுமாறு அரசை வலியுறுத்தியுள்ளார்கள்! ஒவ்வொரு இரவும் பறவைகளின் இன்னிசையோடு விடியும் காட்டில் . சுற்றுலாதளம் வந்தால் …மனிதர்களின் இரைச்சலோடுதான் காட்டின் இரவு விடியும் என்கிறார்கள்.
காலநிலை மாற்றத்தையும், காடுகளின் இருப்பையும் உணர்ந்து இந்த திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்பதே நமது விருப்பம் .லாங்வுட் சோலாவில் அயல் தாவரங்களின் பெருக்கம் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த வேண்டும்! இயல் தாவரங்களின் வளர்ச்சிக்கு திட்டமிட வேண்டும்! தனியார் தேயிலைத்தோட்ட முதலாளிகள் போட்டு வைத்துள்ள மின்வேலிகளால் ஒரு காட்டிலிருந்து இன்னொரு காட்டுக்குள் விலங்குகள் பயணிக்க முடியாத சூழல் இருப்பதை அரசும் அரசு சார்ந்த நிறுவனங்களும் கவனத்தில் கொண்டு காடுகளை காப்பாற்ற வேண்டும் என்று வன ஆர்வலர் ஒருவர் அதிர்ச்சி தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.