பாரம்பரிய சின்னமான தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஆடை கட்டுப்பாடு அறிவித்ததை அறநிலையத்துறை திரும்ப பெற வேண்டும்!

  • பாரம்பரிய சின்னமான தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஆடை கட்டுப்பாடு அறிவித்ததை அறநிலையத்துறை திரும்ப பெற வேண்டும்!

தஞ்சையில் இடதுசாரிகள் பொது மேடை கண்டன ஆர்ப்பாட்டம்*

உலகின் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில் 1000 ஆண்டு பழமை வாய்ந்ததாகும். பெரிய கோவிலுக்கு தமிழ்நாடு உள்ளிட்டு அனைத்து மாநிலங்களிருந்தும், உலக நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் தினமும் வந்து செல்கின்றனர் . இரண்டு தினங்களுக்கு முன்னதாக இந்து சமய அறநிலையதுறையும், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானமும் இணைந்து தஞ்சாவூர் பெரிய கோயிலில் நுழைவதற்கு ஆடை கட்டுப்பாடு குறித்து அறிவிப்பு பலகை ஒன்றை டிரஸ் கோடு என்ற பெயரில் வைத்துள்ளது.  இந்த அறிவிப்பில் ஆண்கள் வேட்டி சட்டை, பேண்ட் சட்டை அணிந்து தான் வர வேண்டும், பெண்கள் புடவை ஜாக்கெட், பாவாடை தாவணி, துப்பட்டா சுடிதார் அணிந்து வரவேண்டும் என குறிப்பிட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

திடீரென யாரிடமும் எந்தவித கருத்துக்களும் கேட்காமல் எந்த அடிப்படையில், யாருடைய நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் வைக்கப்பட்டுள்ளது என்பது மர்மமாக உள்ளது. அறநிலையத்துறை மற்றும் அரண்மனை தேவஸ்தானத்தின் அறிவிப்பு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி இடதுசாரிகள் பொதுமேடை சார்பில் இன்று காலை 10 மணிக்கு தஞ்சாவூர் ரெயிலடி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வெ.சேவையா தலைமை வகித்தார். மக்கள் அதிகாரத்தின் மாநில பொருளாளர் காளியப்பன் ஆர்ப்பாட்டத்தினை துவக்கி வைத்து பேசும்பொழுது தஞ்சாவூர் பெரிய கோயில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்தது மட்டுமல்ல ஆயிரம் ஆண்டு காலத்திற்கு முன்னதாக வாழ்ந்த தமிழர்களின் தொன்மை, கட்டடக்கலை, வரலாறு, ஆட்சி முறை, தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு ,கலாச்சாரம், ஓவியம் ,சிற்பம் உள்ளடக்கிய தமிழர்களின் சான்றாக இன்றளவும் விளங்கி வருகின்றது. தஞ்சாவூர் பெரிய கோயிலை முதன்முதலாக உலகிற்கு இந்தியாவிற்கு தமிழ்நாட்டிற்கு தெரியப்படுத்தியவர் ஜெர்மனியைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் தான், அதற்கு முன்னதாக தஞ்சாவூர் பெரிய கோயில் யாருக்கும் இவ்வளவு சிறப்பாய்ந்ததாக தெரியப்படாமல் இருந்தது.

1922 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னதாகவே தொல்லியல் துறை வெள்ளையர்கள் ஆட்சி காலத்திலேயே பெரிய கோவிலை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. 1986 ல் யுனெஸ்கோ நிறுவனம் உலகின் பாரம்பரிய சின்னமாக அறிவித்து தஞ்சாவூர் பெரிய கோயிலை பராமரித்து வருகிறது. இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறையும் அரண்மனை தேவஸ்தானமும் ஏன் இந்த திடீர் ஆடை கட்டுப்பாடு அறிவிப்பை வெளியிட வேண்டும், பலகை வைக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.. தஞ்சாவூர் பெரிய கோவில் பழமை கெடக்கக்கூடாது என்பதற்காக அதன் பாரம்பரியமும், தொன்மையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக பல்வேறு அமைப்புகள் சார்பில் பல போராட்டங்கள் எடுக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது இந்த அறிவிப்பானது மறைமுகமாக இந்துத்துவா பின்னணியில், ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டுக்குள் பெரிய கோவிலைக் கொண்டு வரும் முயற்சியாகவே நாம் கருத வேண்டி உள்ளது. உலகின் பாரம்பரிய சின்னமான யுனெஸ்கோ நிறுவன கட்டுப்பாட்டில் உள்ள தஞ்சாவூர் பெரிய கோயிலை பாதுகாக்க வேண்டியது உலக மக்கள் அனைவரின் கடமையாகும். ஆயிரம் ஆண்டு காலத்திற்கு மேலாக தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு வந்து செல்கின்றவர்களால் இதுநாள் வரை எந்த வித அசம்பாவிதமும் நடைபெறவில்லை . இந்த அடிப்படையில் திடீரென கட்டுப்பாடு விதித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உடனடியாக இந்துசமய அறநிலையத்துறை, அரண்மனை தேவஸ்தானம் ஆடைக்கட்டுப்பாடு அறிவிப்பை திரும்ப பெற வேண்டும், இல்லையென்றால் மிகப்பெரிய போராட்டத்தை நாங்கள் முன்னெடுக்க வேண்டி இருக்கும் என்று காளியப்பன் தனது உரையில் குறிப்பிட்டார்.

ஆர்ப்பாட்டத்தில் இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் எம்.வடிவேலன், நிர்வாகிகள் குருசாமி, அன்பு, கரிகாலன், ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தமிழ்முதல்வன், சாமி, கோதண்டராமன், வெற்றி,சி பி எம் எல் மக்கள் விடுதலை மாவட்ட செயலாளர் இரா.அருணாச்சலம், தமிழ்த்தேச மக்கள் முன்னணி மாவட்ட செயலாளர் அருண் சோரி, விடுதலைதமிழ்ப் புலிகள் கட்சியின் மாநகர செயலாளர் தமிழ் ,ஆதித்தமிழர் பேரவை மாநில துணைத்தலைவர் எம்.பி நாத்திகன், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட தலைவர் வி.கல்யாண சுந்தரம், மற்றும் சமூக ஆர்வலர் விசிறி சாமியார் முருகன், ஆசிரியர் லூர்துராஜ், ஆட்டோ சங்கர் நிர்வாகிகள் சாமிநாதன், லட்சுமணன், கண்ணன், சுரேஷ் ஆகியோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தினை உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர் அயனாபுரம் சி.முருகேசன் முடித்து வைத்த நிறைவு உரையாற்றினார். முடிவில் மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் தேவா நன்றியுரை வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்