சிவகங்கை to திருப்பத்தூர் ரோட்டில்  பார்க்க வேண்டிய மிக முக்கிய சுற்றுலா தளங்கள்.

சிவகங்கை to திருப்பத்தூர் ரோட்டில்  பார்க்க வேண்டிய மிக முக்கிய சுற்றுலா தளங்கள்.

கோடை விடுமுறை நிறைவுறும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிற இப்பொழுதில் இன்னும் சுற்றுலா செல்லாமல் வேலையில் மூழ்கிக் கிடப்பவர்களும் உண்டு, மேலும் வெளியூருக்கெல்லாம் சுற்றுலா சென்றவர்கள் உள்ளூரின் அழகை ரசிக்காத நிலையும் உண்டு, இவற்றிற்கெல்லாம் வழியாய் ஒரு சுற்றுலா வழி. சிவகங்கையிலிருந்து திருப்பத்தூர் செல்லும் 35 கிலோ மீட்டருக்குள் அரிதான இடங்களை சுற்றுலாத் தலங்களை அறிமுகப்படுத்துகிறது இந்தக்கட்டுரை. சிவகங்கையில் பல்வேறு தொல்லியல் ஆய்வுகள் செய்துவரும் தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா சிவகங்கை குறித்து பல்வேறு ஸ்வாரசியங்களை பகிர்ந்துகொண்டதை நாமும் இங்கு பகிர்கிறோம்.

திரும்பி பார்க்க வைக்கும் திருமலை

மிகப் பழமையான தொன்மை கருவூலம் இந்தத் திருமலைதான். சிவகங்கையில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு சின்ன குன்று தான் திருமலை. ஒக்கூரிலிருந்து கீழப்பூங்குடிக்கு சென்று அங்கிருந்து ஒரு 3 கிலோமீட்டர் தொலைவில் திருமலைக் குன்றை அடையலாம். இக்குன்றில் நான்காயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள், பறவை முக மனிதர்களின் ஓவியங்கள், விலங்கின் மேல் அமர்ந்த மனித உருவம் என செஞ்சாந்து ஓவியங்களை அடுத்தடுத்துக் காணலாம். இவை நான்காயிரம் ஆண்டு பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது. பல இடங்களில் செஞ்சாந்து நிறங்கள் மட்டும் பாறையில் அப்பி உள்ளதை வைத்து ஓவியங்கள் நிறைய இருந்து பின்னாளில் அழிந்து உள்ளதை உணர முடிகிறது.

சமணப் படுக்கை

பாறை ஓவியங்கள் உள்ள பாறையின் பின்பகுதியில் இயற்கை குகைத்தளத்தில் அமைந்த சமணப்படுக்கையை காண முடியும், மேலும் குவைத் தளத்தின் மேல் பகுதியில் காடி வெட்டி தண்ணீர் உள்வராமல் தடுத்துள்ளதையும் இதில் 2000 ஆண்டு பழமையான தமிழி எழுத்தில் எக்காட்டூர் காவிதிகோன் கொறிய பாளி என்று எழுதியுள்ளதையும் காணலாம்.

குடைவரை

மலையின் இடைப்பகுதியில் அமைந்துள்ளது மலைக் கொழுந்தீஸ்வரர் கோயில் இதில் 7,8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குடைவரை உள்ளது. இதில் சிவனும் பார்வதியும் அமர்ந்த நிலையில் உள்ளனர். அதன் கீழ் பாண்டியர்களின் கட்டுமானக் கோயில் அமைந்துள்ளது. இதுவும் மிக பழமையானதாகும் இங்குள்ள மகிஷாசுரமர்த்தினி சிலை மிகவும் அழகு பொருந்தியது. நீங்கள் கோயிலுக்குச் செல்லும் முன் கீழப் பூங்குடியிலே கோயில் அர்ச்சகரின் தொடர்பு எண்ணை வாங்கி அழைப்பு விடுத்து செல்வது நலம். அங்கிருந்து புறப்பட்டு மதகுபட்டி தாண்டி ஏரியூர் மலை மருந்தீஸ்வரர் கோயிலை அடையலாம்.

ஏரியூர் மருந்தீஸ்வரர் கோயில்

சிவகங்கையில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஏரியூர் மலை மருந்தீஸ்வரர் கோயில். இது சிவன் கோயிலாக இருந்தாலும் இங்குள்ள முருகனுக்கே பங்குனி உத்திரத் திருவிழா கொண்டாடப்படுகிறது. சின்ன மண்மலைக்குன்றில் அமைந்துள்ள கோயிலில் வாகனங்கள் மேல் வரை செல்ல சாலை வசதி அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மலை தொடர்ச்சி பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். மலையில் உள்ள கற்குவியல்கள் வித்தியாசமானவை, குறிப்பாக சிறிய கல் மீது ஒரு பெரிய கல்லை தூக்கி வைத்தது போல் உள்ள ஆகாசக் கல் மிகுந்த வியப்புக்குரியது. இக்கோயிலைச் சுற்றி அரிய வகை மூலிகைகள் உள்ளதாலே இங்குள்ள சுயம்புலிங்க மூர்த்தி மருதீஸ்வரர் என்ற பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் இரவில் ஒளிரும் ஒரு அரியவகை மரமே கோயிலின் தலவிருட்சமாக உள்ளது. இது பார்ப்பதற்கு பெரு மகிழ்ச்சியைத் தரும். இங்கிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் 108 திவ்ய தளங்களில் ஒன்றாகவும் பாண்டிய நாட்டு வைணவத் தளங்களில் ஒன்றாகவும் உள்ள திருக்கோஷ்டியூர் மாதவன் கோயிலை அடையலாம்.

திருக்கோட்டியூர் மாதவன் கோயில்

மூன்று அடுக்குகளை கொண்ட விமானத்துடன் நின்று, இருந்த, கிடந்த கோலங்களில் எழுந்தருளி இருக்கின்ற பெருமாளை நாம் வணங்கலாம். கோயிலின் நுழைவிலே உள்ள நர்த்தன கண்ணன் சிலையும் மிகுந்த அழகு பொருந்தியது. இக்கோயிலின் உள்ளேயே பழமையான சிவன் கோயில் ஒன்றும் உள்ளது. பலரும் அறியாததாகும். இங்குள்ள முருகன் சிலை மிகுந்த வனப்புடையதாகக் காணப்படுகிறது. அனைவரும் நலமுடன் வாழ ஓம் நமோ நாராயணா என்ற மறைபொருளை கோபுரத்தின் மேல் நின்று உரத்த குரலில் உபதேசித்த இராமானுஜரின் வரலாற்றுடன் தொடர்புடையது இக்கோயில் என்பது பெருஞ் சிறப்பு. மாடக்கோயிலில் காணப்படும் ஓவியங்கள் சேதுபதி மன்னர்களது இராமலிங்க விலாச ஓவியம் போல் இருந்தாலும் கடவுள் தொடர்புடையனவாக வரையப்பட்டுள்ளன. இவ்வூரில் நடைபெறும் மாசி மகத்தெப்பத் திருவிழாவிற்கு இலட்சக்கணக்கில் மக்கள் கூடுகின்றனர். சோசியர் தெப்பக்குளத்திற்கு எதிரே வைரவன்பட்டியில் பழமையான சிவன் கோயில் ஒன்றும் உள்ளது. இங்கிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் திருப்புத்தூர் என்று இலக்கியங்களிலும் கல்வெட்டிலும் அழைக்கப்படும் திருப்பத்தூரை அடையலாம்.

திருத்தளிநாதர் திருத்தலம், திருப்பத்தூர்

பழமையான கோயில் என்பதை தளி என்ற சொல்லால் அறிய முடிகிறது. இங்குள்ள இறையனாரை சமயக்குரவர்கள் பாடி சிறப்பித்துள்ளனர், பாடல் பெற்ற பாண்டி நாட்டு பழம்பதி பதினான்கனுள் ஒன்றாக இக்கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் எட்டாம் நூற்றாண்டு முதல் 16ஆம் நூற்றாண்டு வரையான பாண்டியர், சோழர், விஜயநகர பேரரசுகள், நாயக்கர்கள் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கோயிலில் அமைந்துள்ள திருத்தளிநாதர் மற்றும் பைரவர் சன்னதிகள் புகழ்மிக்கவை பைரவர் சன்னதிக்கு முன்னுள்ள மண்டபத்தில் மருது பாண்டியர்களின் சிலைகள் இடம்பெற்றுள்ளன. இதன் அருகில் அமைந்துள்ள பூமாயி அம்மன் கோயில் சப்த கன்னியர் கோயிலாகும் அதையும் கண்டு வணங்கி வழிபட்டு மகிழலாம். மேலும் மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட இடம் மற்றும் ஸ்வீடிஸ் மிஷின் மருத்துவமனையில் ஒரு பகுதியில் மருதுபாண்டியரின் நினைவுமண்டபம் அவரது உருவச் சிலைகள் ஆகியவற்றை கண்டு தமிழக வரலாற்றையும் அறிந்து மகிழலாம்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்