சுரண்டை பகுதியை புறக்கணிக்கும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் நிறுத்தப்பட்ட அரசு பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என,பொதுமக்கள் கோரிக்கை.
சுரண்டை பகுதியை புறக்கணிக்கும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் நிறுத்தப்பட்ட அரசு பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என,பொதுமக்கள் கோரிக்கை.
தென்காசி மாவட்டத்தில் சுரண்டை வளர்ந்து வரும் வணிக நகரங்களில் இரண்டாவது பெரிய நகரமாகும். சுரண்டையை சுற்றிலும் உள்ள நூறு கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களுடைய அத்தியாவசிய தேவைகளுக்காகவும், வர்த்தகம், விவசாயம், சந்தைபடுத்துதல், கல்வி, மருத்துவ வசதி, அரசு அலுவலகங்களுக்காகவும் சுரண்டைக்கு வந்து செல்கின்றனர்.
ஆனால் கடந்த திமுக ஆட்சி நிறைவு பெறும் நேரத்தில் சுரண்டையிலிருந்தும் சுரண்டை வழியாகவும் 95 அரசு போக்குவரத்து கழக நகர மற்றும் புறநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இப் பேருந்துகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது 63 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. அதிலும் சில பேருந்துகள் பல நாட்களாக பொது மக்களுக்கு டிமிக்கி கொடுக்கிறது. சில பேருந்துகள் நிறுத்தப்பட்டே விட்டது.
மக்கள் தொகை மற்றும் நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்காமல், பல பேருந்துகள் நிறுத்தப்பட்டு வருவதால் கிராமபுரத்தை சேர்ந்தவர்களும், சுரண்டையைச் சேர்ந்தவர்களும் வெளியூர் செல்வதற்கு பல பேருந்துகள் மாறி செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.
குறிப்பாக, பாபநாசம் பணிமனையில் இருந்து இயக்கப்பட்டு வந்த கல்லிடைக்குறிச்சி – புளியங்குடி ( கடையம், சுரண்டை, ஆய்குடி வழி) பாபநாசம் – சங்கரன்கோவில் (வழி பாப்பாங்குளம், பாவூர்சத்திரம், சுரண்டை தடம் எண் 130பி) மற்றும் தென்காசி பனிமனையில் இருந்து இயக்கப்பட்டு வந்த கடையம் – இருக்கன்குடி பேருந்து (வழி பாவூர்சத்திரம், சுரண்டை, சங்கரன்கோவில்) சுரண்டை – இருக்கன்குடி (வழி கீழக்கலங்கல், சங்கரன்கோவில்) சுரண்டையிலிருந்து சுந்தரபாண்டியபுரம் வழியாக தெற்குமேடு, சுரண்டையில் இருந்து பணவடலிசத்திரம், சுரண்டையில் இருந்து தேவர்குளம் பஸ், மாலை 6 மணிக்கு ஆலங்குளத்தில் இருந்து சுரண்டை வழியாக இயக்கப்பட்டு வந்த திருப்பூர் பேருந்து, காலை 6 மணிக்கு சுரண்டையில் இருந்து ராஜபாளையம் வழியாக மதுரைக்கு இயக்கப்பட்டு வந்த பாண்டியன் போக்குவரத்து கழக பேருந்து, மாலை 3 மணிக்கு புளியங்குடி பனிமனையில் இருந்து சுரண்டை, சங்கரன்கோவில், ராஜபாளையம் வழியாக மதுரைக்கு இயக்கப்பட்டு வந்த பேரூந்துகளும்
சுரண்டையில் இருந்து திருச்செந்தூர், நாகர்கோவில், தூத்துக்குடிக்கு நேரடியாக இயக்கப்பட்ட அரசு பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் சுரண்டை மற்றும் சுற்று வட்டார பயணிகளும் பொதுமக்களும் விவசாயிகளும் மாணவ மாணவிகளும் கடும் சிரமத்தை அடைகின்றனர் மேலும் சுரண்டையில் இருந்து திருநெல்வேலி, தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளுக்கு 15 நிமிட இடைவெளியில் பஸ்கள் இயக்க அட்டவணை இருந்தும் சரிவர இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவே அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் சுரண்டையிலிருந்து இயக்கி நீக்கப்பட்ட அனைத்து அரசு பேருந்துகளையும் மீண்டும் இயக்குவதுடன்,
கூடுதலாக சுரண்டையில் இருந்து கோவை, பெங்களூர், திருப்பதி, தேனி, குமுளி, ராமநாதபுரம், கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளுக்கும் புதிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு அதிகாரிகளும், தென்காசி எம்.எல்.ஏ, பழனிநாடார் மற்றும் அமைச்சர்களும் பொது மக்களின் கோரிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும்.