நாட்டரசன்கோட்டையில் வாகனங்கள் செல்ல தடுமாறும் சாலை.

நாட்டரசன்கோட்டையில் வாகனங்கள் செல்ல தடுமாறும் சாலை.

சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் இருந்து ஒக்கூர் செல்லும் சாலை குண்டும், குழியுமாய் உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். உடனடியாக சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

நாட்டரசன்கோட்டை பேரூராட்சியில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சிவகங்கையில் இருந்து நாட்டரசன்கோட்டை வழியாக காளையார்மங்கலம், ஒக்கூர், மதகுபட்டி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியே தினந்தோறும் காலை மற்றும் பகல், இரவு நேரங்களில் அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது.

இச்சாலை உள்ள பகுதியை சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்தினர் அனைவரும் இந்த சாலை வழியேதான், சிவகங்கை, நாட்டரசன்கோட்டை, ஒக்கூர், மதகுபட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்வர். அதிகப்படியான டூவீலர் பயன்பாடுள்ள இச்சாலை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் புதிய சாலையாக போடப்பட்டது.

ஆனால் நாட்டரசன்கோட்டை பேரூராட்சி பகுதிக்குள் வரும் சுமார் 500 மீ தூரமுள்ள சாலை சில மாதங்களிலேயே பெயர்ந்து குண்டும், குழியுமாய் ஆனது. அவ்வப்போது பள்ளங்களில் மண் கொட்டுவதும், ஒட்டுப்போடும் பணிகள் மட்டும் செய்யப்பட்டது. ஆனால் அதுவும் சில மாதங்களிலேயே பெயர்ந்ததில் இருந்து தற்போது வரை ஆண்டுக்கணக்கில் பெரிய பள்ளங்களுடன் காட்சியளிக்கிறது.

சில இடங்களில் சாலை இருந்த சுவடே இல்லாமல் மண் சாலையாக காட்சியளிக்கிறது. இதனால் மழை க்காலங்களில் வாகன ஓட்டிகள் மற்றும் இப்பகுதியில் வசிப்பவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பொதுமக்கள் கூறியதாவது:வாகனங்கள் அதிகமாக வந்து செல்லும் முக்கியமான இந்த சாலை ஆண்டுக்கணக்கில் பராமரிப்பில்லாமல் உள்ளது. மழை காலங்களில் மண் குழம்புக்குள் வாகனம் ஓட்டி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இந்த மண் காய்ந்தவுடன் வாகனங்கள் செல்லும் போது அதிகப்படியான தூசி ஏற்படுகிறது. இதனால் இப்பகுதியில் வீடுகளில் வசிப்பவர்கள் கடும் அவதியடைந்து வருகிறோம். உடனடியாக இச்சாலையை பராமரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்