பிரியாணி வாசனையை காலி பண்ணும் பலாப்பழ வாசனை.  மணமணக்கும் ராமநாதபுரம் தொகுதி..!

 

      பிரியாணி வாசனையை காலி பண்ணும் பலாப்பழ வாசனை.

 மணமணக்கும் ராமநாதபுரம் தொகுதி..!

       ராமநாதபுரம் மாவட்டத்தில்  ராமநாதபுரம், பரமக்குடி முதுகுளத்தூர், திருவாடனை, ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகள், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகள் அடங்கியது தான் ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி.

இந்த தொகுதியின் சிட்டிங் எம்.பியாக இருக்கும் இந்தியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த நவாஸ்கனி. கடந்த முறை பாஜகவை சேர்ந்த நயினார் நாகேந்திரனை நான்கு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதனாலும், ராமநாதபுரத்துக்கு நிறைய பணிகள் திட்டங்களை கொண்டு வந்ததால் மீண்டும் நவாஸ்கனியே வேட்பாளராக ஏணி சின்னத்தில் போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளராக விருதுநகர் மாவட்ட அவைத்தலைவராக இருக்கும் ஜெயபெருமாள், பாஜக கூட்டணி கட்சி வேட்பாளராக முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், நாம் தமிழர் கட்சி சார்பில் சந்திரப்பிரியா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    ராமநாதபுரம் ரயில்வே ஸ்டேஷனை மேம்படுத்தி மிளிர வைத்தது,  ஆற்றங்கரை ஊராட்சி, புதுவலசை ஊராட்சி, ஆர்.எஸ் மங்கலம் சோழாந்தூர், மண்டபம் என்மனங்கொண்டான், திருப்புல்லாணி குத்துக்கல் வலசை, முதுகுளத்தூர் வளநாடு, நம்புதாளை, என்று பல பகுதிகளில் உயர் மின்கோபுர விளக்குகள் அமைத்து கொடுத்தது. பல கிராமங்களில் பயணியர் நிழற்குடை அமைத்து கொடுத்தது. பரமக்குடியில் கீழ் முஸ்லிம் மேல் நிலை பள்ளியில் இறகு பந்து உள் விளையாட்டு அரங்கம் அமைத்து கொடுத்தது.  கோவில்கள் பள்ளிகளில் மற்றும் பொது இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் அமைத்து கொடுத்தது. பல கோவில்களில் உணவு அருந்தும் கூடம் அமைத்து கொடுத்தது. சிறிய பெரிய பாலங்கள் அமைத்து கொடுத்தது என்று பல திட்டங்களை செயல்படுத்தியதாக சொல்லியே நவாஸ்கனி வாக்கு சேகரித்து வருகிறார்.

   அதேபோல் அமைச்சர் ராஜகண்ணப்பன் நவாஸ் கனி மோதல் பிரச்சனையில், நவாஸ்கனி மீது யாதவ சமுதாய மக்கள் பெரும் கோபத்தில் இருக்கிறார்கள் அவர்களை எல்லாம் நவாஸ்கனி சரி பண்ண எந்த முயற்ச்சியும் எடுக்கவில்லை. அதேபொல் திமுகவிலும் இந்த முறை தங்களுக்கு கொடுக்கவில்லையே என்ற ஆதங்கமும் நவாஸ்கனிக்கு எதிராக திரும்பியிருக்கிறது. முஸ்லிம் பிரமுகர்கள் மத்தியிலும் நவாஸ்கனி தொகுதிக்கு ஒன்றும் செய்யவில்லை என்ற கோபம் இருக்கிறது.

      அதிமுகவை சேர்ந்த ஜெயபெருமாள் என்பவர் நிற்கிறார். முக்குலோத்தர் வகுப்பை சேர்ந்தவர்.  திருச்சுழி சட்டமன்ற தொகுதியை சேர்ந்தவர். அதிமுக பல வி.ஐ.பி வேட்பாளர்கள் போட்டியிட விருப்பம் தெரிவிக்கவில்லை என்பதால் தான் ஜெயபெருமாள் வேட்பாளர் ஆக்கப்பட்டார் என்கிறார்கள். அரசியல் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த ஜெயபெருமாளுக்கு அனைத்து கட்சியிலும் ஆதரவு உள்ளதாக சொல்லப்படும் வேளையில் அவரும் பம்பரமாக சுழன்று வேலை செய்கிறார். மாவட்ட நிர்வாகிகளும் பலமான ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள்.

    அதேபோல் பாஜக கூட்டணி கட்சி சார்பில் ஒ.பன்னீர் செல்வம் பலாப்பழ சின்னத்தில் நிற்கிறார். டி.டி.வி தினகரனின் ஆதரவாளர்கள் இந்த தொகுதியில் கணிசமான அளவில் இருப்பதால் பழாப்பழத்தை பழுக்க வைத்து விடலாம் என்ற கனவோடு தான் பணத்தை தாறுமாறாக இறைத்து வேலை செய்து வருகிறார். ஒ.பன்னீர்செல்வம். முக்குலோத்தோர், யாதவர், தேவேந்திரகுல வேளாள சமுதாய முக்கிய பிரமுகர்களை எல்லாம் தன் பக்கம் சாய்த்துவிட்டார் ஒ.பி.எஸ்.

நாம் தமிழர் வேட்பாளர் சந்திரபிரபாவும் கணிசமான வாக்குகளை பிரிப்பதற்கு பம்பரமாக சுழன்று வாக்கு வேட்டையாடி வருகிறார்.

    ஆக தற்போதைய நிலவரப்படி பிரியாணி வாசத்தை விட தொகுதி முழுவதும் பலாப்பழ வாசம் கம கமக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்