திருப்பூர்: வீட்டில் பதுக்கி வைத்திருந்த 18½ கிலோ கஞ்சா – பீகாரை சேர்ந்த 5 பேர் கைது.
திருப்பூர்: வீட்டில் பதுக்கி வைத்திருந்த 18½ கிலோ கஞ்சா – பீகாரை சேர்ந்த 5 பேர் கைது.
திருப்பூர் மாநகர பகுதியில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளதை தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக வெளிமாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் என்ற போர்வையில் கஞ்சாவை கடத்தி வந்து திருப்பூரில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் திருப்பூர் பொம்மநாயக்கன்பாளையம் பவானிநகர் பகுதியில் போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார் மேற்பார்வையில் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் நேற்று தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டில் வடமாநிலத்தவர்கள் தங்கியிருந்து கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.
அந்த வீட்டில் இருந்து 5 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த அபினேஷ்குமார் (வயது 23), ரோஷன் குமார் (20), விர்ஜிகுமார் (25), சன்னி (19) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து மொத்தம் 18½ கிலோ கஞ்சா மற்றும் 4 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
பீகாரில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து வீட்டில் பதுக்கி வைத்து திருப்பூரில் விற்பனை செய்ததாக தெரிவித்தனர். இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.