*80 பெண்களை ஏமாற்றிய திருவண்ணாமலை இளைஞர்* செல்போனை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த போலீசார்!
*80 பெண்களை ஏமாற்றிய திருவண்ணாமலை இளைஞர்*
செல்போனை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த போலீசார்!
தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அருகே உள்ள இடையாநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி. இவரிடம் மேட்ரிமோனி மூலம் அறிமுகமான சக்கரவர்த்தி என்ற இளைஞர், திருமணம் செய்து கொள்வதாகக்கூறி 20 பவுன் தங்க நகைகளை மோசடி செய்து ஏமாற்றியுள்ளார்.
இது குறித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சாந்தி புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் திருவிடைமருதூர் துணை போலீஸ் ஜாபர் சித்திக் தலைமையிலான தனிப்படை போலீசார் சக்கரவர்த்தியைத் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் தேடி வந்த நிலையில், திருவிடைமருதூரில் கைது செய்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, அவரிடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவரது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் என்பதும், 12ம் வகுப்புவரை மட்டுமே படித்துள்ள அவர் சென்னையில் இன்ஜினியராக வேலை பார்ப்பதாகக் கூறிக்கொண்டு மேட்ரிமோனியில் இரண்டாம் திருமணத்திற்குப் பதிவு செய்துள்ள பெண்களை மட்டும் குறிவைத்து திருமணம் செய்து வந்துள்ளார்.
பின்னர் அவர்களை ஏமாற்றி நகை மற்றும் பணத்தை வாங்கிக் கொண்டு, அதன் மூலம் சொகுசு கார், நட்சத்திர விடுதி, மது, என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். இவர் மீது 8-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவரிடம் இருந்து, 15 பவுன் தங்க நகை, ஒரு லட்சம் ரொக்கம், ஒரு கார் மற்றும் செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அவருடைய செல்போனை சோதனை செய்ததில் 80க்கும் மேற்பட்ட பெண்களுடன் அவர் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இருப்பதைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அவர் பல பெண்களை ஏமாற்றி இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில், அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.