தமிழகத்தில் முழு மது விலக்கை அமல்படுத்த வேண்டும் விசிக தலைவர் திருச்சி கலந்துரையாடல் கூட்டத்தில் பேச்சு.

தமிழகத்தில் முழு மது விலக்கை அமல்படுத்த வேண்டும்
விசிக தலைவர் திருச்சி கலந்துரையாடல் கூட்டத்தில் பேச்சு.

தமிழக அரசு முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசு மது கொள்கையை ஏற்படுத்த வேண்டும் என்றார் வி சி க தலைவர் தொல். திருமாவளவன்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில், மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு,விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. கட்சியின் தலைவரும் சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தலைமை வகிக்கிறார்.

இது குறித்து திருச்சி, கருர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய மத்திய மண்டல நிர்வாகிகள் மற்றும் மகளிர் விடுதலை இயக்க நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் பங்கேற்று அவர் மேலும் பேசியது : மது ஒழிப்புக்கு அரசியல் சாயம் பூசாமல் 10 பேராவது பாராட்டி ஊக்கப்படுத்தியிருந்தால் அனைத்து தரப்பினரும், கட்சி சார்பற்ற பொதுமக்கள் பலரும் களத்தில் கைகோர்க்க முன்வந்திருப்பர். மது ஒழிப்பு என்பது பொதுவான பிரச்னை, இது ஒரு சமூகத்திற்கான பிரச்னையோ, குறிப்பிட்ட கட்சிக்கான பிரச்னையோ, தேர்தலுக்கா, அரசியலுக்காக பேசப்படுகிற பிரச்னையும் அல்ல. சமூகப் பொறுப்போடும் தொலைநோக்குப் பார்வையோடும் மானுட தர்மத்தை நெஞ்சில் ஏந்தி முன்னெடுக்கிற ஒரு பணியாகும். இதை யாரும் புரிந்துகொள்ளவில்லை. இப்போது நான் சிக்கலான புள்ளியில் நின்று கொண்டிருக்கிறேன். பலமுறை பல மேடைகளில் இது குறித்து நான் விளக்கம் சொல்லிவிட்டேன். மது ஒழிப்பை 100% தூய நோக்கில், சமூகப் பொறுப்போடு, தொலைநோக்கு பார்வையோடு விடுதலை சிறுத்தைகள் கட்சி கையில் எடுத்துள்ளது என்று. ஆனால் எத்தனை முறை சொன்னாலும் யார் காதுகளிலும் இது போய் சேரவில்லை.
கூட்டணி கட்சியாக இருந்தாலும் பிரச்னைகளை நாங்கள் துணிந்து பேசுவோம். இது சிறுத்தைகளின் வரலாறு. ஈழத் தமிழர் பிரச்சினையாக இருக்கட்டும், வேங்கை வயல் பிரச்சனையாக இருக்கட்டும் அதற்காக போராடியவர்கள் சிறுத்தைகள். ஈழத் தமிழர்களுக்காக அதிமுகவோடு பயணித்த இயக்கம், ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத்தோடு இணைந்து பயணிப்பது என முடிவெடுத்து அதன் கூட்டணியில் பயணித்தோம். ஆளுங்கட்சிக்கு நெருடலை தரக்கூடிய வகையில் நாங்கள் போராட்டங்களை நடத்தவில்லை. பிரச்னைக்கு முன்னுரிமை தர வேண்டும் என்பதற்காகத்தான் போராட்டம் நடத்துகிறோம். ஆனால் சிலர் கூட்டணியை விட்டு வெளியே வா என பேசுகின்றனர், அவர்களுக்கு ஒரே பார்வை, அதாவது கூட்டணியை விட்டு நாங்கள் வெளியே வர வேண்டும் என்பது. எங்களது கோரிக்கை குறித்து தொடக்கத்தில் இருந்தே நான் கூறி வருகிறேன். அதாவது தமிழ்நாடு அரசு முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசு அதற்கான கொள்கை முடிவை எடுக்க வேண்டும் என்பதுதான் என்றார் அவர்.

நிகழ்வில் நிர்வாகிகள் பொன்னிநிலவவன், தமிழாதன், பிரபாகரன், அன்பானந்தம், வேலுதமிழ்வேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பாலாஜி, பட்டிமன்ற பேச்சாளர் எம்.ராமலிங்கம் ஆகியோர் பேசினர். முதன்மைச் செயலாளர் திருமார்பன், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் கிட்டு, மாவட்ட செயலாளர்கள் லாரன்ஸ், கனியமுதன், சக்தி ஆற்றலரசு, கலைச்செல்வன், குருஅன்புச் செல்வம்(திருச்சி), வெள்ளை நெஞ்சன் ( புதுக்கோட்டை), தமிழ்ச்செல்வன், இளமதிஅசோகன், புகழேந்தி (கரூர்), இளங்கோவன், சக்திவேல், கலையரசன்(பெரம்பலூர்) ரத்தினவேல், கதிர்வேல் (அரியலூர்), சிவா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்