பீர் பாட்டிலில் தண்ணீர் குடித்த மார்க்சிஸ்ட் நிர்வாகிக்கு சிக்கல்.
பீர் பாட்டிலில் தண்ணீர் குடித்த மார்க்சிஸ்ட் நிர்வாகிக்கு சிக்கல்.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் சிந்தா ஜெரோம், காலி பீர் பாட்டிலில் தண்ணீர் குடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.
இங்குள்ள கொல்லம் மாவட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாடு சமீபத்தில் நடந்தது.
இதில், அக்கட்சியின் மாநில உறுப்பினரும், கேரள மாநில இளைஞர் ஆணையத்தின் முன்னாள் தலைவியுமான சிந்தா ஜெரோம் பங்கேற்றார்.
மாநாட்டில் பிளாஸ்டிக் ஒழித்தல், பசுமை காப்போம் உள்ளிட்ட கருத்துகள் வலியுறுத்தப்பட்டன. அதேசமயம், அங்கு வந்தவர்களுக்கு பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு பதிலாக மறுபயன்பாட்டில் உள்ள காலி கண்ணாடி பாட்டில்களில் தண்ணீர் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற சிந்தா ஜெரோம், அங்கு மறுபயன்பாட்டில் இருந்த காலி பீர் பாட்டிலில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரை பருகினார். இந்த படம், அடுத்த சில தினங்களில் சமூக வலைதளங்களில் வலம் வந்தது.
நிகழ்ச்சியில், அவர் பீர் அருந்தியதாக தகவல்கள் பரப்பப்பட்டன. இந்நிலையில், இதுகுறித்து தன் சமூக வலைதள பக்கத்தில் சிந்தா விளக்கம் அளித்துள்ளார்.
அதில், ‘கட்சி மாநாட்டில் பசுமை நெறிமுறைகள் பின்பற்றப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, மறுபயன்பாட்டு பாட்டில்களில் நிரப்பப்பட்ட கருங்காலி மூலிகை குடிநீர் அனைவருக்கும் வழங்கப்பட்டது. அதை நான் பருகினேன்.
‘இது படம் எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் தவறாக பரப்பப்படுகிறது. இந்த விஷயத்தில், இடதுசாரி எதிர்ப்பாளர்களால் பொய் பிரசாரம் செய்யப்படுகிறது. மூலிகை தண்ணீர் குடிப்பதை, பீர் குடிப்பதாக யாராவது தவறாகக் கருதினால், அவர்களின் மனநிலையை கேள்விக்குள்ளாக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
இந்த விஷயத்துக்காக தான் மிரட்டப்படுவதாக குற்றஞ்சாட்டிய ஜெரோம், இதுகுறித்து போலீசில் புகாரளிக்க உள்ளதாக கூறியுள்ளார்.