தூத்துக்குடி மாவட்டம் அத்திமரப்பட்டியில் உயிர் மூச்சு’ படப்பிடிப்பு: காதல் காட்சிகள் பதிவு : நடுரோட்டில் ‘டான்ஸ் ஆடி கிங்காங் கலக்கல்..!
தூத்துக்குடி மாவட்டம் அத்திமரப்பட்டியில் உயிர் மூச்சு’ படப்பிடிப்பு: காதல் காட்சிகள் பதிவு : நடுரோட்டில் ‘டான்ஸ் ஆடி கிங்காங் கலக்கல்..!
அரசியல் சதுரங்கம், விதி எண்-3, கருப்பு பக்கம், கிராக்கி ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் பிராட்வே சுந்தர் 5-வதாக ‘உயிர் மூச்சு’ என்ற திரைப்படத்தை இயக்குகிறார். விவசாயம் மற்றும் உப்பள தொழிலை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த திரைப்படத்தை, ஜோரா சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. கதை, வசனத்தை ஜோதிமணி எழுதியுள்ளார்.
கல்வியின் அவசியம், மதுவின் கேடு, லஞ்சம் தவிர்த்தல், வரதட்சணை ஒழிப்பு ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டு வரும் இந்த திரைப்படத்தில், மாரடைப்புக்கான முதலுதவி குறித்த விளக்க காட்சியும் இடம் பெறுகிறது. சட்டம் என் கையில் திரைப்படத்தில் நடித்த விக்னேஷ் இத்திரைப்படத்தில் கதாநாயகனாகவும், தொலைக்காட்சி சீரியல்களில் நடித்த சஹானா கதாநாயகியாகவும் அறிமுகம் ஆகின்றனர். மேலும், பிரபல திரைப்பட நடிகர்கள் மீசை ராஜேந்திரன், கிங்காங், விஜயகணேஷ், டெலிபோன் ராஜ், கொல்லம் வினோத், எம்.வெங்கடேசன், ‘கருப்பு பக்கம்’ திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து புகழ் பெற்ற வஜ்ரா ராம், நடிகை தீபா உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர்.
இதற்கான படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று (திங்கட்கிழமை) அத்திமரப்பட்டி மெயின் ரோட்டில் காதல் காட்சிகள் படமாக்கப்பட்டன. கதாநாயகன் பைக்கில் வருவது போலவும், காதலியை கண்டதும் பைக்கை நிறுத்தி, இருவரும் பேசி கொண்டு நடந்து வருவது போலவும், பஸ்டாப்பில் நிற்கும் கதாநாயகியை, டெலிபோன் ராஜ், சுமங்கலி சதீஷ் உள்ளிட்டவர்கள் கேலி செய்வது போலவும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டன.
இதுதவிர, நடிகர் கிங்காங் தனது ஆதரவாளர்களுடன் ரொட்டை அடைத்து கொண்டு, காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க செல்வது போன்றும், எதிரில் வரும் காவல்துறை அதிகாரியை கண்டு புகார் மனு கொடுப்பது போன்றும் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பின் போது, இடையிடையே கிங்காங் டான்ஸ் ஆடியவாறு சென்றார். இதனை வேடிக்கை பார்ப்பதற்காக பொதுமக்கள் நிறைய பேர் அங்கு கூடினர். அதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு நடிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.