பழம்பெரும் தமிழ் நடிகை சி.ஐ.டி சகுந்தலா பெங்களூருவில் காலமானார்.  

பழம்பெரும் தமிழ் நடிகை சி.ஐ.டி சகுந்தலா பெங்களூருவில் காலமானார்.

தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர்  ஏ.சகுந்தலா.

சேலம் மாவட்டத்தின் அரிசிபாளையத்தை சேர்ந்தவர் சகுந்தலா. இவருடன் பிறந்தவர்கள் 4 அண்ணன்களும் தம்பிகளும் 2 சகோதரிகளும் ஆவர். தமிழ்த் திரையுலகில் நடனக்குழுவில் நடனமாடி, பிறகு நல்ல கதாநாயகியாகப் பிரகாசித்தவர்கள் பலர். ஆரம்ப காலங்களில் ஏராளமான படங்களில் கதாநாயகிகள் பாடும்போது தோழிகளில் ஒருத்தியாக நடனமாடியவர்களில் ஏ.சகுந்தலாவும் ஒருவர்.

சென்னையில் லலிதா, பத்மினி, ராகினி நடத்தி வந்த நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடனமாடி வந்தார். அப்போது கிடைத்த அறிமுகங்களின் மூலம் திரையுலகில் நுழைந்து சிறிய  கதாபாத்திரங்களில்  நடிக்கத்தொடங்கினார்.  1970ஆம் ஆண்டு ஜெய்சங்கர் நடிப்பில் வெளியான  ‘சிஐடி சங்கர்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தின் காரணமாகவே, அதன் பிறகு ‘சிஐடி சகுந்தலா’ என்று அழைக்கப்பட்டார்.

தொடர்ந்து ‘படிக்காத மேதை’, ‘கை கொடுத்த தெய்வம்’, ‘திருடன்’, ‘தவப்புதல்வன்’, ‘வசந்த மாளிகை’, ‘நீதி’, ‘பாரத விலாஸ்’, ‘ராஜராஜ சோழன்’, ‘பொன்னூஞ்சல்’, ‘என் அண்ணன்’, ‘இதயவீணை’கி கிரகப்பிரவேசம், கட்டிலா தொட்டிலா, தேடி வந்த லெட்சுமி, தில்லானா மோகனாம்பாள், ரோஷக்காரி, நாடகமே உலகம், அதிர்ஷ்டக்காரன், கருந்தேழ் கண்ணாயிரம், மஞ்சள் குங்குமம், திருமலை-தென்குமரி, தெய்வக் குழந்தைகள் போன்ற 200–க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத் திரைப்படங்களில் கதாநாயகியாகவும், நடனமங்கையாகவும், வில்லிக் கதாபாத்திரங்களிலும் நடித்தவர்.

தமிழ் தவிர, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களிலும்  நடித்து வந்தார்.

சினிமாவிலிருந்து விலகிய பிறகு சீரியல்களில் நடித்து வந்த சிஐடி சகுந்தலா, பின்னர் வயது மூப்பு காரணமாக நடிப்பில் இருந்து ஒதுங்கினார்.

பெங்களூருவில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கியிருந்த அவருக்கு, நேற்று (செப்.17) நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பழம்பெரும் நடிகை  சகுந்தலாவின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்